2028ஆம் ஆண்டின் இறுதியில் இருந்து இலங்கை மீண்டும் பாரிய பொருளாதார சவாலை எதிர்கொள்ள நேரிடலாம் என முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எச்சரித்துள்ளார். கொழும்பில் முன்னாள் அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய எழுதிய “Yudha Dekakata Ura Dee” என்ற நூல் வெளியீட்டு நிகழ்வில் உரையாற்றி…

2028ஆம் ஆண்டின் இறுதியில் இருந்து இலங்கை மீண்டும் பாரிய பொருளாதார சவாலை எதிர்கொள்ள நேரிடலாம் என முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எச்சரித்துள்ளார்.

கொழும்பில் முன்னாள் அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய எழுதிய “Yudha Dekakata Ura Dee” என்ற நூல் வெளியீட்டு நிகழ்வில் உரையாற்றியபோதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

2028ஆம் ஆண்டுக்குப் பின்னர் கடன் மீளச் செலுத்துதல் மீண்டும் ஆரம்பிக்கும்போது, இலங்கைக்கு அடுத்த முக்கிய பொருளாதார சவால் உருவாகும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

2026ஆம் ஆண்டின் இறுதிக்குள் நாட்டின் அந்நியச் செலாவணி கையிருப்பு சுமார் 8 பில்லியன் அமெரிக்க டொலர்களை எட்டும் என எதிர்பார்க்கப்படுவதாகக் குறிப்பிட்ட ரணில் விக்கிரமசிங்க, 2028ஆம் ஆண்டுக்குள் அதனை சுமார் 15 பில்லியன் டொலர்களாக அதிகரிக்க வேண்டியிருக்கும் என தெரிவித்துள்ளார்.

இதற்குத் தேவையான மேலதிக 7 பில்லியன் டொலர்களை இலங்கை எவ்வாறு திரட்டப் போகிறது என்பது முக்கிய கேள்வி எனவும், அதற்கான தெளிவான திட்டம் தற்போது நாட்டிடம் இல்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

எதிர்கால கடன் மீளச் செலுத்தலுக்குத் தேவையான அந்நியச் செலாவணி கையிருப்பை வலுப்படுத்தத் தவறினால், இலங்கை மீண்டும் பாரிய பொருளாதார நெருக்கடிக்குள் சிக்கக்கூடும் எனவும் அவர் எச்சரித்துள்ளார்.

மேலும், 2028ஆம் ஆண்டு வரை கிடைத்துள்ள கடன் மீளச் செலுத்தும் நிவாரணத்தை, நாட்டின் பொருளாதாரப் பிரச்சினைகள் நிரந்தரமாகத் தீர்க்கப்பட்டுவிட்டதாகக் கருத முடியாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

“முதல் சுற்றை முடித்துவிட்டோம். இப்போது இரண்டாவது சுற்றை ஆரம்பிக்க வேண்டும்” எனக் குறிப்பிட்ட அவர், எதிர்கால கடன் பொறுப்புகளை நிறைவேற்றுவதற்குத் தேவையான அந்நியச் செலாவணியை இலங்கை எவ்வாறு ஈட்டப் போகிறது என்பதே முக்கிய கேள்வி எனவும் தெரிவித்துள்ளார்.

தற்போதைய சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) திட்டம் 2027 மார்ச் மாத இறுதியில் நிறைவடையவுள்ள நிலையில், அதற்குப் பின்னரான அரசாங்கத்தின் பொருளாதாரத் திட்டம் குறித்தும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

தமது ஆட்சிக் காலத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட பொருளாதார சட்டங்கள் மற்றும் கட்டமைப்புகள் பொருளாதார ஸ்திரத்தன்மையை உறுதிப்படுத்துவதற்காக உருவாக்கப்பட்டவை எனக் குறிப்பிட்ட அவர், தற்போதைய அரசாங்கம் பொருளாதார மாற்றத் திட்டத்தைத் தொடர வேண்டாம் எனத் தீர்மானித்துள்ளதாகவும் குற்றஞ்சாட்டியுள்ளார்.

2028ஆம் ஆண்டுக்குப் பின்னர் இலங்கை எதிர்கொள்ள வேண்டிய பொருளாதார சவாலை நாட்டின் “மூன்றாவது போர்” என வர்ணித்த ரணில் விக்கிரமசிங்க, அதில் வெற்றி பெறத் தவறினால் நாடு மீண்டும் மிகப்பெரிய பிரச்சினைக்குள் சிக்கக்கூடும் என எச்சரித்துள்ளார்.