22 ஆவது அரசியலமைப்பு திருத்ததுக்கு எதிராக இரண்டு வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. தற்போதைய ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கத்தால் பாராளுமன்றத்திற்கு செவ்வாய்க்கிழமை (18) சமர்ப்பிக்கப்பட்ட 22ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தை நீதிமன்றில் சவாலுக்குட்படுத்த ஐக்கிய மக்கள் சக்தி நடவடிக்கை…

22 ஆவது அரசியலமைப்பு திருத்ததுக்கு எதிராக இரண்டு வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

தற்போதைய ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கத்தால்  பாராளுமன்றத்திற்கு செவ்வாய்க்கிழமை (18) சமர்ப்பிக்கப்பட்ட 22ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தை நீதிமன்றில் சவாலுக்குட்படுத்த ஐக்கிய மக்கள் சக்தி நடவடிக்கை எடுத்துள்ளது.

இதற்கமைய, SC/SD/31/2026 எனும் இலக்கத்தின் கீழ் குறித்த மனு உயர் நீதிமன்றத்தில்  செவ்வாய்க்கிழமை (18) அன்று தாக்கல் செய்யப்பட்டது.

22ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தில் உள்ளடக்கப்பட்டுள்ள விடயங்கள் தொடர்பில் ஐக்கிய மக்கள் சக்தியின் கவனம் திரும்பியுள்ளது. அதன் அரசியலமைப்புச் செல்லுபடியாகும் தன்மை மற்றும் நிலவும் பிரச்சினைகள் தொடர்பில் நீதிமன்றத்தின் கருத்தைப் பெற்றுக்கொள்வதற்காகவே அக்கட்சி இவ்வாறு உயர் நீதிமன்றத்தை நாடியுள்ளது.

அரசியலமைப்பிற்கு மேற்கொள்ளப்படும் எந்தவொரு திருத்தமும் நாட்டின் ஜனநாயகக் கட்டமைப்பில், அதிகாரப் பகிர்வில் மற்றும் மக்களின் உரிமைகளில் ஏற்படுத்தக்கூடிய தாக்கங்கள் பற்றி ஆழமாகப் பரிசீலிக்கப்பட வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தி சுட்டிக்காட்டுகிறது.

22ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலமானது நீதிமன்றத்தின் சுயாதீனத்திற்கும் நீதியின் ஆட்சிக்கும் தீங்கு விளைவிப்பதாகக் குறிப்பிட்டு, அது அரசியலமைப்புக்கு முரணானது எனத் தீர்ப்பளிக்குமாறும், அதனைச் சட்டமாக்குவதற்கு மக்கள் கருத்துக்கணிப்பு (ஜனநாயக வாக்கெடுப்பு) ஒன்றுக்கு உட்படுத்துமாறு உத்தரவிடுமாறும் கோரி இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் உயர்நீதிமன்றத்தில் மனுவொன்றைத் தாக்கல் செய்துள்ளது.

இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் உதவிச் செயலாளர் லக்கித வாகிஸ்ட ஆராச்சிய மற்றும் பொருளாளர் பசிந்து சில்வா ஆகியோரால் தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த மனுவில், சட்டமா அதிபர் பிரதிவாதியாகப் பெயரிடப்பட்டுள்ளார்.

குறித்த சட்டமூலத்தைச் சட்டமாக்குவதற்கு மக்கள் கருத்துக்கணிப்பு இன்றியமையாதது என்பதால், இச்சட்டமூலத்தின் 2 மற்றும் 3ஆம் பத்திகள் அரசியலமைப்புக்கு முரணானவை என அறிவிக்குமாறும், அதனை நிறைவேற்ற மக்கள் கருத்துக்கணிப்புக்கு உட்படுத்துமாறும் இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் தனது மனுவில் கோரியுள்ளது.