புளோரிடா கடற்கரைக்கு அருகில் நடைபெற்ற ஒரு அவசரகால நீர்தளையிறக்கத்திலிருந்து (emergency water landing) உயிர்தப்பியதை நினைத்து, தான் எவ்வளவு "நம்ப முடியாத அளவுக்கு அதிர்ஷ்டசாலி" என்று 23 வயதான விமானி ஒருவர் கருத்துத் தெரிவித்துள்ளார். கடந்த ஆகஸ்ட் 22ஆம் திகதி சனிக்கிழமையன்று காலை…
புளோரிடா கடற்கரைக்கு அருகில் நடைபெற்ற ஒரு அவசரகால நீர்தளையிறக்கத்திலிருந்து (emergency water landing) உயிர்தப்பியதை நினைத்து, தான் எவ்வளவு "நம்ப முடியாத அளவுக்கு அதிர்ஷ்டசாலி" என்று 23 வயதான விமானி ஒருவர் கருத்துத் தெரிவித்துள்ளார்.
கடந்த ஆகஸ்ட் 22ஆம் திகதி சனிக்கிழமையன்று காலை 9:45 மணியளவில் ஃபெய்த் டெங்க்லி (Faith Tenkley) இயக்கிய சிறிய இரட்டை என்ஜின் விமானத்தில் மின்சாரக் கோளாறு ஏற்பட்டதை அடுத்து, அவர் அட்லாண்டிக் பெருங்கடலில் தனது விமானத்தைச் அவசரமாகத் தரையிறக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
இவ்விபத்தில் யாருக்கும் காயங்கள் எதுவும் ஏற்படவில்லை என்றாலும், பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக விமானி உள்ளூர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டதாகக் காவல் துறை தெரிவித்துள்ளது.
மறுநாள், மீட்புக் குழுவினர் பல மணி நேரம் போராடி விமானத்தின் இரு என்ஜின்களையும் அகற்றி, இறக்கைகளைக் கழற்றிய பின்னர் கிரேன் உதவியுடன் விமானத்தைக் கடலிலிருந்து வெளியே தூக்கினர். "போகா ரடன் பகுதியில் இதுபோன்று வழக்கமாக எதையும் பார்க்க முடியாது, ஒருவேளை விமான நிலையத்தில்தான் பார்க்க முடியும்" என்று உள்ளூர்வாசி லீசா கோச் (Lisa Koch) சி.பி.எஸ் தெரிவித்தார்.
"விமானி பாதுகாப்பாக இருப்பதிலும், தனது பயிற்சியின் காரணமாக அவர் எதற்கும் அஞ்சாமல் பத்திரமாக வெளியே வந்ததிலும் எனக்கு மகிழ்ச்சி."
நான்கு ஆண்டுகளாக விமானியாகப் பணிபுரிந்து வரும் டெங்க்லி, பகாமாஸ் (Bahamas) தீவுகளுக்குச் சென்று தனது பெற்றோரை அழைத்து வருவதற்காகச் சென்றுகொண்டிருந்தபோதுதான் விமானத்தில் இயந்திரக் கோளாறு ஏற்பட்டுள்ளது என்று அறியமுடிகின்றது.
விமானத்தின் தரையிறங்கும் உபகரணங்களும் (landing gear) வலது என்ஜினும் பழுதடைந்ததை அடுத்து, முழு எரிபொருளுடன் ஓடுபாதையில் விமானத்தைக் கடினமாகத் தரையிறக்கினால் தீ விபத்து ஏற்படக்கூடும் என்ற ஆபத்தைத் தவிர்க்க, அவர் கடலில் அவசரமாகத் தரையிறக்க முடிவு செய்தார்.
கட்டிடங்கள் மற்றும் பலகை மிதப்பவர்களிடமிருந்து (paddleboarders) விலகிச் செல்ல வேண்டியிருந்ததை அவர் நினைவு கூர்ந்தாலும், கடற்கரைக்கு அருகில் யாருமில்லாத காலியிடத்தைக் கண்டறிந்து டெங்க்லி விமானத்தை மிகவும் மென்மையாகவும் பாதுகாப்பாகவும் தரையிறக்கினார். அதன் பிறகு ஒரு லைஃப்கார்ட் (lifeguard) ஒரு நிமிடத்திற்குள் வந்து அவருக்கு உதவி செய்தார்.
"இது ஒரு குறைபாடற்ற நீர்தளையிறக்கம்" என்று சாட்சியான மைக்கேல் அரிசி (Michael Arizzi) தெரிவித்தார். அதைத் தொடர்ந்து அவரது மனைவி அலெக்சிஸ் (Alexis), "ஆமாம், அவர் தொடக்கம் முதல் இறுதி வரை நிலைமையை முழுமையாகக் தனது கட்டுப்பாட்டிற்குள் வைத்திருந்தார். நான் மிகவும் ஈர்க்கப்பட்டேன். அதனால்தான் முதலில் அங்கே என்ன நடக்கிறது என்று எங்களுக்குப் புரியாமல் குழப்பமடைந்தோம்" என்றார்.
பாக்ஸ் நியூஸ் (Fox News) வெளியிட்ட வீடியோக்களில், விமானம் கடலுக்குள் மூழ்கியதைத் தொடர்ந்து, கடமையில் இருந்த லைஃப்கார்டின் உதவியுடன் டெங்க்லி நீந்திக்கொண்டே கரைக்குத் திரும்புவதைக் காண முடிகிறது. "நேற்றைய எனது எதிர்பாராத நீர்தளையிறக்கத்தைத் தொடர்ந்து, அனைவரும் காட்டிய அக்கறைக்கும் ஆதரவுக்கும் எனது ஆழ்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்" என்று இச்சம்பவத்திற்குப் பிறகு அவர் டபிள்யூ.பி.டி.வி ஊடகத்திடம் கூறினார். "நான் விபத்திலிருந்து எந்தக் காயமுமின்றி நீந்தித் தப்பியது நம்ப முடியாத அளவுக்கு அதிர்ஷ்டமாகவும் நிம்மதியாகவும் இருக்கிறது."
"போகா ரடன் விமான நிலையத்தில் விமானத்தைத் தரையிறக்குவது பாதுகாப்பான வழி அல்ல என்று முடிவு செய்த பிறகு, நான் கடற்கரையை நோக்கித் தொடர்ந்தேன்" என்று அவர் மேலும் கூறினார். "இறங்கும் போது, என்னைச் சுற்றியுள்ள அனைவரின் பாதுகாப்பையும் உறுதி செய்வதே எனது முதன்மைக் குறிக்கோளாக இருந்தது. அருகில் இருந்த அனைத்துக் கட்டிடங்கள், பலகை மிதப்பவர்கள் மற்றும் நீச்சல் வீரர்களைத் (மற்றும் உலோகம் கண்டறியும் கருவிகளைப் பயன்படுத்துபவர்களைக்) வெற்றிகரமாகத் தவிர்த்து, திறந்தவெளிக் கடலை நோக்கி விமானத்தைச் செலுத்த என்னால் முடிந்தது."
விபத்து குறித்த விசாரணையை ஃபெடரல் விமானப் போக்குவரத்து நிர்வாகம் (Federal Aviation Administration) தொடர்ந்து முன்னெடுத்து வருகிறது.












