மார்ச் முதல் ஜூலை வரையிலான ஐந்து மாதங்களில் சுமார் 1.95 இலட்சம் சமூக வலைதளக் கணக்குகளை முடக்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன்படி, நாளொன்றுக்கு சராசரியாக 1,275 முடக்க உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளதுடன், சுமார் 68 நொடிக்கு ஒரு முடக்க உத்தரவு பிறப்பிக்…
மார்ச் முதல் ஜூலை வரையிலான ஐந்து மாதங்களில் சுமார் 1.95 இலட்சம் சமூக வலைதளக் கணக்குகளை முடக்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதன்படி, நாளொன்றுக்கு சராசரியாக 1,275 முடக்க உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளதுடன், சுமார் 68 நொடிக்கு ஒரு முடக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.அதிகபட்சமாக இன்ஸ்டாகிராம் கணக்குகளுக்கு சுமார் ஒரு இலட்சம் முடக்க உத்தரவுகளும், முகநூல் கணக்குகளுக்கு 80 ஆயிரம் உத்தரவுகளும், யூரியூப் கணக்குகளுக்கு 15 ஆயிரம் உத்தரவுகளும் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
கடந்த சில மாதங்களாக தேர்வு முறைகேடுகளைக் கண்டித்து மாணவர்கள் போராட்டங்களில் ஈடுபட்டு வரும் நிலையில், தவறான மற்றும் பொய்யான தகவல்கள் பரவுவதைத் தடுக்கும் நோக்கில் இந்த முடக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
மத்திய மற்றும் மாநில அரசு நிறுவனங்களின் பரிந்துரைகளின் அடிப்படையில் சமூக வலைதளக் கணக்குகளை முடக்குவதற்கான உத்தரவுகள் பிறப்பிக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது.
இந்தக் கணக்குகள் முடக்கப்படும்போது, அவற்றில் பதிவிடப்பட்டுள்ள நூற்றுக்கணக்கான பதிவுகள் மற்றும் உள்ளடக்கங்களும் நீக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
இணையதள முடக்கத்திற்கான உத்தரவுகள் பெரும்பாலும் தகவல் தொழில்நுட்பச் சட்டம், 2000இன் பிரிவு 79(3)(b)-ன் கீழ் பிறப்பிக்கப்படுகின்றன. இந்தப் பிரிவின் கீழ், அரசு மற்றும் சட்ட அமலாக்க நிறுவனங்களால் சட்டவிரோதமானவை எனக் கருதப்படும் உள்ளடக்கங்களை நீக்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.












