அரசாங்கப் பாடசாலை ஆசிரியர்களுக்கு இம்மாதச் சம்பளம் வழங்குவதில் எந்தப் பிரச்சினையும் கிடையாது எனவும், அது தொடர்பாக எதிர்க்கட்சியினரால் முன்வைக்கப்படும் கூற்று உண்மைக்குப் புறம்பானது எனவும் பிரதமரும் கல்வி, உயர்கல்வி அமைச்சருமான ஹரிணி அமரசூரிய தெரிவித்தார். பாராளுமன்றத்தில் வியாழக…
அரசாங்கப் பாடசாலை ஆசிரியர்களுக்கு இம்மாதச் சம்பளம் வழங்குவதில் எந்தப் பிரச்சினையும் கிடையாது எனவும், அது தொடர்பாக எதிர்க்கட்சியினரால் முன்வைக்கப்படும் கூற்று உண்மைக்குப் புறம்பானது எனவும் பிரதமரும் கல்வி, உயர்கல்வி அமைச்சருமான ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (20) இடம்பெற்ற வாய்மூல விடைக்கான வினா நேரத்தில், பாராளுமன்ற உறுப்பினர் ருவன் விஜேவீர எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும் போதே பிரதமர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
நாடாளுமன்ற உறுப்பினர் ருவன் விஜேவீர தனது கேள்வியின் போது, "பாடசாலைகளுக்கு அதிபர்களை நியமிக்கும் போது, அடிப்படைக் கல்வித் தகமைகளுக்கு மேலதிகமாகக் கல்வி அமைச்சினால் வேறு செயற்பாடுகளை அடிப்படையாகக் கொண்ட விடயங்களை கவனத்தில் எடுப்பதற்கு அவதானம் செலுத்தப்பட்டுள்ளதா?" எனக் கேள்வி எழுப்பினார்.
அதற்குப் பதிலளித்த பிரதமர் கூறியதாவது: "நீண்ட காலமாக அதிபர்களின் நியமனங்கள் அதற்கான நியதிகளுக்கு இணங்க முறையாக முன்னெடுக்கப்படவில்லை. அதனால்தான் நாம் அரச சேவை ஆணைக்குழுவுடன் இணைந்து அதனை முறைப்படுத்துவது தொடர்பில் பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்துள்ளோம்.
அத்துடன், பொதுவான கல்வி மறுசீரமைப்பு ஊடாக மனிதவள முகாமைத்துவ அடிப்படையில் தற்போதுள்ள முறைமையை மீளாய்வு செய்து, அனைத்துச் சுற்றறிக்கைகளையும் ஆராய்ந்து குழு ஒன்றின் மூலம் கல்வித் தகமைகளுக்கு மேலதிகமான விடயங்கள் தொடர்பில் கவனம் செலுத்தப்படும். அதிபர்கள் நியமனத்தின் போது கல்வித் தகமைக்கு மேலதிகமாக மேலும் பல விடயங்கள் கவனிக்கப்பட வேண்டும் என்பதில் நாமும் உறுதியாக உள்ளோம். எதிர்காலத்தில் முறையான மாற்றங்களை ஏற்படுத்த நடவடிக்கை எடுப்போம்.
அதேவேளை, எதிர்க்கட்சி உறுப்பினர் ஒருவரால் புதன்கிழமை பொய்யான கூற்று ஒன்று சபையில் முன்வைக்கப்பட்டுள்ளது. அதில் அவர், 'அரசாங்கப் பாடசாலை அதிபர்களுக்கு இந்த மாதம் சம்பளம் வழங்கப்பட மாட்டாது' என்பது போன்ற தோரணையில் கருத்துக்களை முன்வைத்துள்ளார். அதிபர்கள் தொடர்பான பிரச்சினையொன்றை அவர் முன்வைத்து உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்திருந்தார். அவ்வாறான எந்தத் தீர்மானமும் கிடையாது.
ஆசிரியர்களுக்கான சம்பளம் வழங்கப்படாது என்பதில் எந்த உண்மையும் கிடையாது. ஆசிரியர்களுக்குச் சம்பளம் வழங்குவதில் எந்தப் பிரச்சினையும் இல்லை. அந்த வகையில், அவர்களுக்கான சம்பளம் வழமைபோன்று உரிய முறையில், உரிய திகதியில் வழங்கப்படும்" என்றார்.












