திருடர்களும் வழக்கு விசாரணைகள் இருப்பவர்களுமே அரசாங்கம் கொண்டுவந்திருக்கும் 22 ஆவது திருத்தத்தை எதிர்க்கிறார்கள் என அரசாங்கம் தெரிவிக்கிறது. அப்படியானால் மகாநாயக்க தேரர்கள் திருடர்களா? சட்டத்தரணிகள் சங்கம், சர்வதேச சட்டத்துறையைச் சேர்ந்தவர்கள், மக்கள் விடுதலை முன்னணியின் சட்டத்த…

திருடர்களும் வழக்கு விசாரணைகள் இருப்பவர்களுமே அரசாங்கம் கொண்டுவந்திருக்கும் 22 ஆவது திருத்தத்தை எதிர்க்கிறார்கள் என அரசாங்கம் தெரிவிக்கிறது. அப்படியானால் மகாநாயக்க தேரர்கள் திருடர்களா? சட்டத்தரணிகள் சங்கம், சர்வதேச சட்டத்துறையைச் சேர்ந்தவர்கள், மக்கள் விடுதலை முன்னணியின் சட்டத்தரணிகள் இதனை எதிர்க்கிறார்கள். அவர்களும் திருடர்களா என பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச கேள்வி எழுப்பினார்.

பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (20) இடம்பெற்ற பெண்களையும், இளம் ஆட்களையும் மற்றும் பிள்ளைகளையும் தொழிலுக்கமர்த்துதல் (திருத்தச்) சட்டமூலம் மீதான விவாதத்தில் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு கேள்வி எழுப்பிய அவர் மேலும் பேசுகையில்,

"அரசாங்கம் நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதெல்லையை அதிகரிப்பதற்காக அனைத்துத் தரப்பினிகளையும் புறந்தள்ளிவிட்டுச் செயற்பட்டு வருகிறது. நாட்டில் இன்று மக்கள் பலவேறு பிரச்சினைகளை எதிர்கொண்டு வருகின்றனர்.

அதேபோன்று அரச ஊழியர்களுக்குப் பிரச்சினைகள் இருக்கின்றன. இவை அனைத்தையும் அரசாங்கம் பின்னுக்குத் தள்ளிவிட்டு, அரசாங்கத்தின் இருப்பைப் பாதுகாத்துக்கொள்வதற்காக நீதிபதிகளின் வயதெல்லையை அதிகரிப்பதற்கு நடவடிக்கை எடுத்திருக்கிறது. அதேநேரம் திருடர்களும் வழக்கு விசாரணைகள் இருப்பவர்களுமே அரசாங்கம் கொண்டுவந்திருக்கும் 22 ஆம் திருத்தத்தை எதிர்க்கிறார்கள் என அரசாங்கம் தெரிவிக்கிறது.

அப்படியானால் மகாநாயக்க தேரர்கள் திருடர்களா? சட்டத்தரணிகள் சங்கம், சர்வதேச சட்டத்துறையைச் சேர்ந்தவர்கள் இதனை எதிர்க்கிறார்கள். அவர்களும் திருடர்களா?

அத்துடன், இதுதொடர்பில் மகாநாயக்க தேரர்கள் ஜனாதிபதிக்கு அனுப்பிய கடிதம் தொடர்பில் எந்தப் பதிலையும் தெரிவிக்காமல் அரசாங்கம் நிராகரித்துள்ளது. வரலாற்றில் முதல் தடவையாகவே மகாநாயக்க தேரர்களின் கடிதம் இவ்வாறு காரணமின்றி நிராகரிக்கப்பட்டுள்ளது. அதேநேரம் அரசாங்கத்தில் இருப்பவர்கள் நீதிமன்ற உத்தரவுகளைப் புறக்கணித்து வருகின்றனர். பிடியாணை விதிக்கும் நீதிபதிகளுக்கு இடமாற்றம் வழங்கப்படுகிறது. அரசாங்கத்தில் இருப்பவர்களுக்கு எதிரான பல வழக்கு விசாரணைகள் இடம்பெற்று வருவதால், அதில் இருந்து பாதுகாத்துக்கொள்ளவே அரசாங்கம் நீதிபதிகளின் வயதெல்லையை அதிகரிப்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ளது" என்றார்.