அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து ஈரான் மீது நடத்திய தாக்குதலுக்குப் பின்னர் தொடங்கிய மத்திய கிழக்கு போர், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் பதவிக்காலம் முடியும் வரை நீடிக்கக்கூடும் என ஈரானின் மூத்த இராணுவ அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். இஸ்லாமிய புரட்சிகர காவல் படையான IRGC-…

அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து ஈரான் மீது நடத்திய தாக்குதலுக்குப் பின்னர் தொடங்கிய மத்திய கிழக்கு போர், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் பதவிக்காலம் முடியும் வரை நீடிக்கக்கூடும் என ஈரானின் மூத்த இராணுவ அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இஸ்லாமிய புரட்சிகர காவல் படையான IRGC-யின் தளபதியும், ஈரானின் உச்ச தலைவர் மொஜ்தபா கமேனியின் நெருங்கிய உதவியாளருமான முகமது ரெசா நக்தி, அமெரிக்க ஊடகமான PBS-க்கு வழங்கிய நேர்காணலில் இந்த கருத்தை தெரிவித்துள்ளார்.ட்ரம்பின் பதவிக்காலம்

போர் நீடிக்கும் ஒவ்வொரு நாளும் ஈரானுக்கு போரில் அதிக அனுபவம் கிடைத்து வருவதாக அவர் கூறியுள்ளார்.

“இந்தப் போர் நீடிக்கும் வரை நாங்கள் கற்றுக்கொள்வோம். அமெரிக்காவுடன் எவ்வாறு போரிடுவது என்பதை கடந்த ஐந்து மாதங்களில் கற்றுக்கொண்டுள்ளோம்” என அவர் தெரிவித்துள்ளார்.

ட்ரம்பின் பதவிக்காலம் முடியும் வரை போரை நீட்டிப்பதே ஈரானின் நோக்கமா என கேட்கப்பட்டபோது, ஈரானுக்கு எதிராக மீண்டும் தாக்குதல் நடத்த நினைப்பவர்கள் அதன் விளைவுகளையும் செலவையும் உணரும் வகையில் தடுப்பு சக்தியை உருவாக்க வேண்டும் என நக்தி தெரிவித்துள்ளார். ட்ரம்பின் தற்போதைய பதவிக்காலம் 2029 ஜனவரி 20ஆம் திகதி முடிவடைய உள்ளது. அமெரிக்கா போரில் அணு குண்டை பயன்படுத்த வாய்ப்புள்ளதா என கேட்கப்பட்டபோது, அது அமெரிக்காவுக்கு மிகப்பெரிய தவறாக முடியும் என நக்தி எச்சரித்துள்ளார்.

அமெரிக்கா அணு ஆயுதத்தை பயன்படுத்தினால், உலகம் முழுவதும் உள்ள அமெரிக்க இராணுவத் தளங்கள் பாதிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

அதேவேளை, ஈரான் அணு ஆயுதத்தை உருவாக்குவது குறித்து பரிசீலிக்கிறதா என கேட்கப்பட்டபோது, அதற்கான தேவை இல்லை என அவர் கூறியுள்ளார். ஈரான் தனது ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்களை மட்டுமே நம்பியிருக்கவில்லை என நக்தி தெரிவித்துள்ளார்.

போர் பல ஆண்டுகள் நீடித்தாலும், இறுதி நாள் வரை ஈரானிடம் இருந்து ரொக்கெட்டுகள் ஏவப்படும் என்றும் அவர் கூறியுள்ளார். ஈரான் எச்சரிக்கை மேலும், ஈரான் தினமும் உற்பத்தி செய்யும் ஏவுகணைகளின் எண்ணிக்கை, அது ஏவுகின்ற ஏவுகணைகளின் எண்ணிக்கையை விட அதிகம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.இதற்கிடையில், போரை நிரந்தரமாக முடிவுக்கு கொண்டுவர அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே நடைபெறும் பேச்சுவார்த்தைகளில் இதுவரை குறிப்பிடத்தக்க முன்னேற்றம் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜூன் 17ஆம் திகதி ட்ரம்பும் ஈரான் ஜனாதிபதி மசூத் பெசெஷ்கியனும் போரை முடிவுக்கு கொண்டுவரும் வகையில் 14 அம்ச உடன்பாட்டில் கையெழுத்திட்டிருந்தனர்.

எனினும், ஜூலை 8ஆம் திகதி அந்த உடன்பாடு முடிவடைந்துவிட்டதாக ட்ரம்ப் தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து, அமெரிக்கா தனது உறுதிமொழிகளை மீறியதாக குற்றம்சாட்டி ஈரானும் அந்த ஒப்பந்தத்தை நிறுத்தியது.

இதனால், போர் நீடிக்கும் காலம் மற்றும் அமெரிக்கா–ஈரான் இடையிலான அடுத்தகட்ட பேச்சுவார்த்தைகள் குறித்து தொடர்ந்து பதற்றமான சூழல் நிலவி வருகிறது.