செ.தி.பெருமாள் மின்சாரத் தாக்குதலுக்கு இலக்கான இரு மாணவர்கள் உட்பட 35 வயதுடைய ஆண் ஒருவர் அடங்கலாக மூவர் வட்டவளை பொலிஸாரின் அதிவிரைவு நடவடிக்கையால், மீட்கப்பட்டுள்ளனர். இச்சம்பவம் வியாழக்கிழமை (27 ) மதியம் வட்டவளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட குயில்வத்தை தோட்டத்தில் இடம்பெற்றுள்ளது. க…

செ.தி.பெருமாள்

மின்சாரத் தாக்குதலுக்கு இலக்கான இரு மாணவர்கள் உட்பட 35 வயதுடைய ஆண் ஒருவர் அடங்கலாக மூவர் வட்டவளை பொலிஸாரின் அதிவிரைவு நடவடிக்கையால்,  மீட்கப்பட்டுள்ளனர்.

இச்சம்பவம் வியாழக்கிழமை (27 ) மதியம் வட்டவளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட குயில்வத்தை தோட்டத்தில் இடம்பெற்றுள்ளது.

குயில்வத்தை தோட்டத்தில் வசிக்கும் 35 வயதுடைய ஆண் ஒருவரும், 12 மற்றும் 13 வயதுடைய பாடசாலை மாணவர்கள் இருவருமாக மூவர், வீட்டுக்கு விறகு தேடிச் சென்ற வேளையில் அப்பகுதியிலுள்ள மரத்தில் ஏறி கிளை ஒன்றை வெட்டியுள்ளனர். அப்போது, வெட்டிய கிளை அப்பகுதியில் சென்ற அதி உயர் மின்சாரக் கம்பியின் மீது விழுந்துள்ளது. மரத்தின் ஊடாக மின்சாரம் பாய்ந்ததில் மின்சாரத் தாக்குதலுக்கு இலக்கானவர்கள் அலறியுள்ளனர்.

இவர்கள் வட்டவளை குயில்வத்தை தமிழ் மகா வித்தியாலயத்தில் தரம் 7 மற்றும் தரம் 8 இல் கல்வி பயிலும் மாணவர்கள் ஆவர். இவர்கள் தங்களது வீட்டிற்கு மேல்பகுதியிலுள்ள காட்டுப் பகுதியில் காய்ந்த விறகுகளை வெட்டுவதற்காக மரத்தில் ஏறியபோதே, மரத்திற்கு அருகில் சென்ற 33,000 வோல்டேஜ் அதி உயர் மின்சாரக் கம்பிகள் மீது கிளை வீழ்ந்துள்ளது.

மாணவர்கள் அலறுவதைக் கேட்ட தோட்டத் தொழிலாளர்கள், அப்பகுதியில் போக்குவரத்துக் கடமையில் ஈடுபட்டிருந்த வட்டவளை பொலிஸ் போக்குவரத்துப் பிரிவின் பொலிஸ் கொன்ஸ்டபிள் சஞ்சீவாவிற்கு   தகவல் வழங்கியுள்ளனர். உடனடியாகச் செயற்பட்ட அவர், வட்டவளை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி, தலைமைப் பொலிஸ் பரிசோதகர் சந்தன கமகே அவர்களுக்கு இது குறித்து அறிவித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து, பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி உடனடியாக நோட்டன் பிரிட்ஜ் மின்சார நுகர்வோர் மையத்தின் அதிகாரியைத் தொடர்புகொண்டு, அப்பகுதிக்கான அதி உயர் மின்சார விநியோகத்தைத் துண்டிக்க நடவடிக்கை எடுத்தார். மின்சாரம் துண்டிக்கப்பட்டதைத் தொடர்ந்து, பொலிஸார் உடனடியாகச் செயற்பட்டு மாணவர்களையும் மற்றைய நபரையும் மீட்டு வட்டவளை பிரதேச வைத்தியசாலையில் அனுமதித்தனர்.

இச்சம்பவத்தில் ஒரு மாணவனின் உடலில் பல இடங்களில் தீக்காயங்கள் ஏற்பட்டுள்ளதாகவும், மற்றைய மாணவர் கடும் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளதாகவும் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி தெரிவித்தார். எனினும், காயமடைந்தவர்களின் உயிருக்கு எந்தவித ஆபத்தும் இல்லை என்று வைத்தியசாலை அதிகாரி ஒருவர் உறுதிப்படுத்தியுள்ளார்.

இதேவேளை, மின்சாரக் கம்பிகளில் உரசியவாறு இருந்த மரத்தின் கிளைகளை அகற்றுவதற்கு மின்சார சபையின் அதிகாரிகள் பின்னர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.