இலங்கையின் பிரத்யேக பொருளாதார வலயத்திற்கு அருகில் நங்கூரமிட்டுள்ளதாகக் கூறப்படும் ஈரானிய எரிபொருள் கப்பல்கள் தொடர்பில் அரசாங்கம் அவதானத்துடன் கண்காணித்து வருவதாக வெளியுறவு அமைச்சின் ஊடகப் பணிப்பாளர் நாயகம் துஷார ரொட்ரிகோ தெரிவித்துள்ளார். எனினும், குறித்த கப்பல்கள் இலங்கைக்குச்…
இலங்கையின் பிரத்யேக பொருளாதார வலயத்திற்கு அருகில் நங்கூரமிட்டுள்ளதாகக் கூறப்படும் ஈரானிய எரிபொருள் கப்பல்கள் தொடர்பில் அரசாங்கம் அவதானத்துடன் கண்காணித்து வருவதாக வெளியுறவு அமைச்சின் ஊடகப் பணிப்பாளர் நாயகம் துஷார ரொட்ரிகோ தெரிவித்துள்ளார்.
எனினும், குறித்த கப்பல்கள் இலங்கைக்குச் சொந்தமான நிலப்பரப்பிற்கு வெளியே இருப்பதால், அவை தொடர்பில் இலங்கைக்கு எந்தவித பொறுப்பும் கிடையாது எனவும், அந்தக் கப்பல்களுக்கு இலங்கை தரப்பிலிருந்து எவ்வித வசதிகளும் வழங்கப்படவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
தங்கள் நாட்டுத் துறைமுகங்களை நோக்கி பயணிக்க முடியாத நிலையில் சுமார் 20 ஈரானிய எரிபொருள் கப்பல்கள் தற்போது இலங்கையின் பிரத்யேக பொருளாதார வலயத்திற்கு அருகில் நங்கூரமிட்டுள்ளதாக TankerTrackers இணையதளம் தெரிவித்துள்ளது.
அமெரிக்காவினால் விதிக்கப்பட்டுள்ள கடற்படைத் தடைகள் காரணமாகவே குறித்த கப்பல்களால் ஈரானிய துறைமுகங்களை நோக்கி செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதன்படி, ஈரான் கொடியுடன் கூடிய சுமார் 13 எரிபொருள் கப்பல்களும், தடைகளைத் தவிர்க்கும் நோக்கில் இயக்கப்படும் ‘நிழற்படை’ (Shadow Fleet) கப்பல்கள் சிலவும் பாதுகாப்பு காரணங்களுக்காக இலங்கையின் பிரத்யேக பொருளாதார வலயத்தை அண்மித்த பகுதியில் நங்கூரமிட்டுள்ளதாக TankerTrackers தெரிவித்துள்ளது.
எனினும், நங்கூரமிட்டுள்ள குறித்த கப்பல்களில் தற்போது எரிபொருள் எதுவும் இல்லை எனவும் அந்த இணையதளம் குறிப்பிட்டுள்ளது.
இந்நிலையில், கடந்த மார்ச் மாதம் இலங்கை கரையிலிருந்து சுமார் 19 கடல் மைல் தொலைவில் இருந்த ‘ஐரிஷ் டேனா’ (Iris Dena) என்ற கப்பல் அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பலால் தாக்கப்பட்டு மூழ்கடிக்கப்பட்டதாகக் கூறப்படும் சம்பவத்தின் பின்னணியில், இலங்கையை அண்மித்துள்ள கப்பல்களுக்கும் பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்படக்கூடும் என TankerTrackers சுட்டிக்காட்டியுள்ளது.
எவ்வாறாயினும், சர்வதேச சட்டத்தின் கீழ் நடுநிலை நாட்டின் பிராந்திய கடல் எல்லைக்குள், அதாவது கரையிலிருந்து 12 கடல் மைல் வரையிலான பகுதியில் தங்கியிருக்கும் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்துவதற்கு அமெரிக்காவிற்கு சட்டரீதியான அனுமதி இல்லை எனவும் அந்த இணையதளம் குறிப்பிட்டுள்ளது.
இந்நிலையில், இலங்கையின் கடல் பாதுகாப்பு மற்றும் நடுநிலைத் தன்மையை பாதிக்கக்கூடிய எந்தவொரு சூழ்நிலையும் ஏற்படாத வகையில் அரசாங்கம் நிலைமையை உன்னிப்பாக அவதானித்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.












