டஜன் கணக்கான நாடுகளுக்கு புதிய சுங்க வரிகளை விதித்ததன் மூலம் தனது அதிகார வரம்பை மீறிச் செயல்பட்டதாகக் குற்றஞ்சாட்டி, அமெரிக்காவின் 25 மாநிலங்கள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நிர்வாகத்திற்கு எதிராக திங்கள்கிழமை (03) வழக்குத் தொடர்ந்துள்ளன. நியூயோர்க்கில் உள்ள அமெரிக்க சர்வதேச வர்த்த…

டஜன் கணக்கான நாடுகளுக்கு புதிய சுங்க வரிகளை விதித்ததன் மூலம் தனது அதிகார வரம்பை மீறிச் செயல்பட்டதாகக் குற்றஞ்சாட்டி, அமெரிக்காவின் 25 மாநிலங்கள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நிர்வாகத்திற்கு எதிராக திங்கள்கிழமை (03) வழக்குத் தொடர்ந்துள்ளன.

நியூயோர்க்கில் உள்ள அமெரிக்க சர்வதேச வர்த்தக நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவில், குறித்த சுங்க வரிகளை உடனடியாக நிறுத்தவும், அவை சட்டவிரோதமானவை என அறிவிக்கவும், வசூலிக்கப்பட்ட தொகையைத் திருப்பிச் செலுத்துமாறு அரசாங்கத்துக்கு உத்தரவிடவும் நீதிமன்றத்திடம் கோரப்பட்டுள்ளது.

கடந்த மாதம் இலங்கை உள்ளிட்ட சுமார் 60 வர்த்தகப் பங்காளி நாடுகளின் இறக்குமதிப் பொருட்களுக்கு 10 முதல் 12.5 சதவீதம் வரை புதிய சுங்க வரிகளை ட்ரம்ப் நிர்வாகம் விதித்தது. அந்தத் தீர்மானத்தையே இந்த சட்டரீதியான சவால் குறிவைத்துள்ளது.

1974ஆம் ஆண்டின் வர்த்தகச் சட்டத்தின் 301ஆம் பிரிவின் கீழ், “கட்டாய உழைப்பு” தொடர்பான குற்றச்சாட்டுகளை அடிப்படையாகக் கொண்டு அமெரிக்க வர்த்தகப் பிரதிநிதி அலுவலகம் (USTR) மேற்கொண்ட விசாரணைகளைத் தொடர்ந்து இந்த வரிகள் அமுல்படுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இரண்டாவது பதவிக்காலத்தை ஏற்றுக்கொண்டதிலிருந்து, உலகின் பல நாடுகளுக்கு எதிராக பரவலான சுங்க வரிகளை ட்ரம்ப் நிர்வாகம் அமுல்படுத்தி வந்துள்ளது. அமெரிக்கா சர்வதேச வர்த்தகத்தில் பாதிக்கப்படுவதாக வாதிடும் ட்ரம்ப், புதிய வர்த்தக ஒப்பந்தங்களைப் பெறுவதற்கான பேரம்பேசும் கருவியாக சுங்க வரிகளை பயன்படுத்தி வருவதாகவும் கூறப்படுகிறது.