ஈரானுடனான ஐந்து மாதங்களாக நீடித்து வரும் மோதலை முடிவுக்குக் கொண்டுவரும் வகையில், ஒரு நல்ல ஒப்பந்தத்தில் கையெழுத்திட இதுவே அந்நாட்டுக்குக் கிடைத்துள்ள “இறுதி வாய்ப்பு” என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். அதேவேளை, அமெரிக்காவுடன் எந்தவொரு பேச்சுவார்த்தையும் நடைப…

ஈரானுடனான ஐந்து மாதங்களாக நீடித்து வரும் மோதலை முடிவுக்குக் கொண்டுவரும் வகையில், ஒரு நல்ல ஒப்பந்தத்தில் கையெழுத்திட இதுவே அந்நாட்டுக்குக் கிடைத்துள்ள “இறுதி வாய்ப்பு” என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். அதேவேளை, அமெரிக்காவுடன் எந்தவொரு பேச்சுவார்த்தையும் நடைபெறவில்லை என ஈரான் திட்டவட்டமாக மறுத்துள்ளது.

வெள்ளை மாளிகையின் ஓவல் அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய ட்ரம்ப், ஈரானுடனான போர் நிறுத்தப் பேச்சுவார்த்தைகள் தற்போது நடைபெற்று வருவதாகக் கூறினார். ஈரான், சவுதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் கட்டார் உள்ளிட்ட நாடுகளின் வேண்டுகோளின் பேரில் இந்த முயற்சிகள் இடம்பெற்று வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

மேலும், ஈரான் ஒரு நல்ல ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதற்கு இதுவே கடைசி வாய்ப்பு என்றும், அதனை தவறவிடக்கூடாது என்றும் ட்ரம்ப் எச்சரித்தார்.

இருப்பினும், அமெரிக்காவுடன் எந்தவொரு பேச்சுவார்த்தையும் நடைபெறவில்லை என்றும், அதற்கான எந்தத் திட்டமும் இல்லை என்றும் ஈரான் வெளியுறவு அமைச்சகத்தின் பேச்சாளர் இஸ்மாயில் பாகாயி தெரிவித்துள்ளார். வரும் நாட்களில் வெளிநாட்டு பிரதிநிதிகளைச் சந்திக்கவோ அல்லது பேச்சுவார்த்தைக்காக பிரதிநிதிகளை வெளிநாடுகளுக்கு அனுப்பவோ திட்டமிடப்படவில்லை என்றும் அவர் கூறினார்.

இதேவேளை, ஹார்முஸ் நீரிணை தொடர்பாக ஓமானுடன் நடைபெறும் பேச்சுவார்த்தைகள் மட்டுமே தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாக ஈரான் தெரிவித்துள்ளது.

ட்ரம்பின் அறிவிப்பும், ஈரானின் மறுப்பும் இரு நாடுகளுக்கும் இடையிலான மோதலுக்கு உடனடி இராஜதந்திரத் தீர்வு எட்டப்படுவதற்கான வாய்ப்பு தற்போது மிகவும் குறைவாக இருப்பதை வெளிப்படுத்துவதாக அரசியல் ஆய்வாளர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர்.