கனடா நாட்டில் வேலை பெற்றுத் தருவதாகக் கூறி இலங்கையர்களை எத்தியோப்பியாவிற்கு அழைத்துச் சென்று சித்திரவதை செய்த வழக்கில் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார் எனத் தெரிவித்த குற்றப் புலனாய்வுத் திணைக்களம் மூவர் மீட்கப்பட்டுள்ளனர் என அறிவித்துள்ளது. இதுதொடர்பில் பொலிஸ் ஊடகப்பிரிவு செவ…
கனடா நாட்டில் வேலை பெற்றுத் தருவதாகக் கூறி இலங்கையர்களை எத்தியோப்பியாவிற்கு அழைத்துச் சென்று சித்திரவதை செய்த வழக்கில் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார் எனத் தெரிவித்த குற்றப் புலனாய்வுத் திணைக்களம் மூவர் மீட்கப்பட்டுள்ளனர் என அறிவித்துள்ளது. இதுதொடர்பில் பொலிஸ் ஊடகப்பிரிவு செவ்வாய்க்கிழமை (04) மாலை விடுத்துள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது
பாதுகாப்பு அமைச்சகத்தினால் பொலிஸ் மா அதிபருக்கு 2026.05.27 அன்று அனுப்பப்பட்ட தகவலுக்கமைய, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் மனித கடத்தல் மற்றும் கடல்சார் குற்றங்கள் புலனாய்வுப் பிரிவினால் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டன.
வெளிநாட்டு அமைச்சகத்தின் ஊடாக எத்தியோப்பியத் தூதரகமும், எ த்தியோப்பியப் பொலிஸ் பிரிவும் இதற்குத் தேவையான ஒத்துழைப்பினை வழங்கின.
விசாரணையின் போது, கிளிநொச்சிப் பிரதேசத்தைச் சேர்ந்த நபர் ஒருவரின் ஊடாக யாழ்ப்பாணம், வவுனியா மற்றும் கிளிநொச்சிப் பிரதேசங்களைச் சேர்ந்த 25, 26 மற்றும் 27 வயதுடைய மூவர் டுபாய் ஊடாக எத்தியோப்பியாவிற்குச் சென்று, அங்கிருந்து கனாடா நாட்டிற்குச் செல்வதற்குத் திட்டமிட்டிருந்ததுடன், அவர்களிடமிருந்து சந்தேகநபர் விமான டிக்கெட் மற்றும் விசா பெற்றுக்கொள்வதற்காக 64 இலட்சம் ரூபாய் பணத்தைப் பெற்றுள்ளமை தெரியவந்துள்ளது.
அவர்கள் கனாடாவிற்குச் சென்றடைந்த பின்னர் ஒரு நபரிடமிருந்து 100 இலட்சம் ரூபாய் பெற்றுக்கொள்வது என்ற ஒப்பந்தத்தின் அடிப்படையில் வெளிநாட்டு வேலைவாய்ப்பிற்கு அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளமை மேலும் தெரியவந்துள்ளது.
மேற்கண்ட மூவரும் டுபாய் ஊடாக எத்தியோப்பியாவிற்குச் சென்றதன் பின்னர், அங்கு இயங்கும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல்களில் ஈடுபடும் நபர் குழுவொன்றினால் கடத்தப்பட்டுள்ளனர். அந்தக் குற்றவாளிகளிடமிருந்து அவர்களை மீட்டுக்கொள்வதற்காக ஒரு நபருக்கு 30,000 அமெரிக்க டொலர் பணத்தைக் கப்பமாக வழங்குமாறு அங்கு இயங்கும் குற்றவாளிகளால், கிளிநொச்சிப் பிரதேசத்தில் வசிக்கும் மேற்கண்ட நபர்களை வெளிநாட்டுக்கு அனுப்பிய நபர்கள் ஊடாக அவர்களின் உறவினர்களுக்கு அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அந்த நபரிடம் அவர்களின் உறவினர்களால் 200 இலட்சம் ரூபாவிற்கு நெருங்கிய தொகை வழங்கப்பட்டுள்ளது.
மேலதிக விசாரணைகளின் போது கண்டறியப்பட்ட தகவல்களின் அடிப்படையில், கிளிநொச்சிப் பிரதேசத்தில் வசிக்கும் மேற்கண்ட வெளிநாட்டு வேலைவாய்ப்பிற்கு அனுப்பும் செயற்பாட்டுடன் தொடர்புடைய நபர், மனித கடத்தல் மற்றும் கடல்சார் குற்றங்கள் புலனாய்வுப் பிரிவினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
எத்தியோப்பிய அதிகாரிகளால் கடத்தப்பட்ட மூன்று இலங்கையர்களை மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன், இந்த ஊழலுடன் தொடர்புடைய நான்கு பாக்கிஸ்தானியப் பிரஜைகளும் ஒரு எத்தியோப்பியப் பிரஜையும் அந்த நாட்டு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இலங்கையர்கள் மூவரும் எத்தியோப்பாவில் உள்ள இலங்கைத் தூதரக அதிகாரிகளால் விசாரணை நடத்தப்பட்டதன் பின்னர் நாட்டிற்கு அழைத்துவரப் பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டுள்ள கிளிநொச்சிப் பிரதேசத்தைச் சேர்ந்த சந்தேகநபருக்கும் எத்தியோப்பாவில் இயங்கும் குற்றக் கும்பல் உறுப்பினர்களுக்கும் இடையிலான தொடர்பை வெளிப்படுத்திக் கொள்வதற்காகக் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் மனித கடத்தல் மற்றும் கடல்சார் குற்றங்கள் புலனாய்வுப் பிரிவினால் தொடர்ந்தும் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.












