ஐந்து கோடி ரூபாய் மற்றும் ஏழரை கோடி ரூபாய் தண்டப்பணம் செலுத்தியவர்களுக்கு கூட மரண தண்டனை வழங்கப்பட்டுள்ள நிலையில், 10 கோடி ரூபாய் தண்டப்பணம் செலுத்திய ஒருவருக்கும் தண்டனை கிடைக்காமல் போகும் வாய்ப்பு குறைவாகவே உள்ளது என மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து ஸ்ரீநேசன…
ஐந்து கோடி ரூபாய் மற்றும் ஏழரை கோடி ரூபாய் தண்டப்பணம் செலுத்தியவர்களுக்கு கூட மரண தண்டனை வழங்கப்பட்டுள்ள நிலையில், 10 கோடி ரூபாய் தண்டப்பணம் செலுத்திய ஒருவருக்கும் தண்டனை கிடைக்காமல் போகும் வாய்ப்பு குறைவாகவே உள்ளது என மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து ஸ்ரீநேசன் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பில் நடைபெற்ற சான்றிதழ் வழங்கும் நிகழ்வில் கருத்து தெரிவித்த அவர், உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் 269 அப்பாவி மக்கள் உயிரிழந்ததுடன், 500 இற்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக குறிப்பிட்டார்.
முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோவுக்கு வழங்கப்பட்டுள்ள தீர்ப்பை சுட்டிக்காட்டிய அவர், பாதுகாப்பு பொறுப்பில் இருந்தவர்கள் தமது கடமையை சரியாக நிறைவேற்றத் தவறியதன் காரணமாகவே இவ்வாறான சட்ட நடவடிக்கைகள் இடம்பெற்றுள்ளதாக தெரிவித்தார்.
அதேவேளை, முன்னாள் பொலிஸ் மா அதிபருக்கும் மரண தண்டனை வழங்கப்பட்டுள்ள நிலையில், இதனுடன் தொடர்புடைய ஏனைய தரப்பினருக்கும் கலக்கம் ஏற்பட்டிருக்கும் என அவர் கூறினார்.
“ஐந்து கோடி ரூபாய் செலுத்தியவருக்கும், ஏழரை கோடி ரூபாய் செலுத்தியவருக்கும் இவ்வாறான தண்டனை வழங்கப்பட்டுள்ள நிலையில், 10 கோடி ரூபாய் செலுத்திய ஒருவருக்கும் தண்டனை கிடைக்காமல் போகும் வாய்ப்பு குறைவு என அவர்கள் சிந்திப்பார்கள்” என ஸ்ரீநேசன் தெரிவித்தார்.
மேலும், உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னணியில் செயற்பட்டதாக கூறப்படும் நபர்கள் தொடர்பிலும் விசாரணைகள் தொடர வேண்டுமென தெரிவித்த அவர், முன்னாள் ஜனாதிபதி ஒருவரை குறிப்பிட்டு, “ஏனையவர்களுக்கு இவ்வாறான தண்டனைகள் வழங்கப்பட்டுள்ள நிலையில், தமக்கும் இதுபோன்ற நிலை ஏற்படுமோ என்ற அச்சத்தில் அவருக்கு தற்போது காய்ச்சல் ஏற்பட்டிருக்கலாம்” என தனது கருத்தை வெளியிட்டார்.












