யுத்த காலத்தில் முறையான கடவுச்சீட்டு மற்றும் அங்கீகரிக்கப்பட்ட இறங்குதுறை இல்லாமல் இந்தியாவுக்குச் சென்று அகதி அந்தஸ்து பெற்றுள்ள இலங்கையர்கள், தமது இலங்கையர் அடையாளத்தை உறுதிப்படுத்திய பின்னர் மீண்டும் நாட்டிற்கு திரும்புவதற்கான வசதிகளை வழங்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. 200…

யுத்த காலத்தில் முறையான கடவுச்சீட்டு மற்றும் அங்கீகரிக்கப்பட்ட இறங்குதுறை இல்லாமல் இந்தியாவுக்குச் சென்று அகதி அந்தஸ்து பெற்றுள்ள இலங்கையர்கள், தமது இலங்கையர் அடையாளத்தை உறுதிப்படுத்திய பின்னர் மீண்டும் நாட்டிற்கு திரும்புவதற்கான வசதிகளை வழங்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

2006ஆம் ஆண்டு ஆகஸ்ட் 1ஆம் திகதிக்கு முன்னர் இந்தியாவுக்குச் சென்றவர்களுக்கு, அரச புலனாய்வு சேவையின் ஒப்புதல் பெறப்பட்டு, குற்றச்செயல்களில் ஈடுபடாதவர்கள் என உறுதிப்படுத்தப்பட்டால் தற்காலிக வெளிநாட்டுக் கடவுச்சீட்டு வழங்கப்படும்.

அதன்படி, குடிவரவு மற்றும் குடியகல்வுச் சட்டத்தின் கீழ் சட்ட நடவடிக்கைகளை எதிர்கொள்ளாமல், அங்கீகரிக்கப்பட்ட இறங்குதுறை வழியாக அவர்கள் இலங்கைக்கு திரும்புவதற்கு அனுமதி வழங்கப்படும்.

2006 ஆகஸ்ட் 1 முதல் 2009 மே 19 வரை யுத்த காலத்தில் முறையற்ற முறையில் இந்தியாவுக்குச் சென்றவர்களுக்கும் இதே நடைமுறை பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும், கொலை, அரசுக்கு எதிரான துரோகம் உள்ளிட்ட கடுமையான குற்றங்களுடன் தொடர்புடையவர்கள் என அடையாளம் காணப்படுபவர்கள் நாட்டிற்குள் நுழையும் போது தடுத்து வைக்கப்பட்டு, உரிய சட்ட நடவடிக்கைகளுக்காக சம்பந்தப்பட்ட நிறுவனங்களிடம் ஒப்படைக்கப்படுவார்கள்.