"எமது சமூகம் அடிமைத்தனத்திலிருந்து விடுதலை பெற வேண்டும் என்றால், கல்விதான் எமக்கான ஒரே சாதனம். அந்தக் கல்வியைச் சரியான முறையில் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்" எனத் தெரிவித்த பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் கௌரவ பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப், "அந்தக் கல்விக்கா…
"எமது சமூகம் அடிமைத்தனத்திலிருந்து விடுதலை பெற வேண்டும் என்றால், கல்விதான் எமக்கான ஒரே சாதனம். அந்தக் கல்வியைச் சரியான முறையில் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்" எனத் தெரிவித்த பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் கௌரவ பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப், "அந்தக் கல்விக்காக இந்திய அரசாங்கம் மலையக மாணவர்களுக்கு வழங்கும் உதவிகளுக்குச் சாதாரணமாக நன்றி கூறி கடந்து போக முடியாது" என்றார்.
கல்வி ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் பின்தங்கியுள்ள தோட்டத் தொழிலாளர்களின் பிள்ளைகளுக்குக் கல்வி வாய்ப்புகளை கடந்த 79 ஆண்டுகளாக வழங்கும் இலங்கை தோட்டத் தொழிலாளர் கல்வி அறக்கட்டளையின் (CEWET) விருது வழங்கல் நிகழ்வு நேற்று (10.08.2026) இந்திய உயர்ஸ்தானிகர் அலுவலகத்தின் ஏற்பாட்டில் தாஜ் சமுத்திரா ஹோட்டலில் நடைபெற்றது.
இதில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றியபோதே பிரதி அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
தொடர்ந்து உரையாற்றிய அமைச்சர்:
"ஒரு சமூகத்துக்கு உட்கட்டமைப்புகளைச் செய்வதг விட, அந்தச் சமூகத்துக்குக் கல்வியை வழங்குவது அந்தச் சமூகத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சியையும் முன்னோக்கி கொண்டு செல்லும். அந்த வகையில், இந்திய அரசு எமக்கான உதவிகளைத் தொடர்ச்சியாகச் செய்து வருகின்றது.
எமது சமூகத்தைப் பொறுத்தவரையில், எமது மாணவர்களுக்குத் திறமைகளும் தகுதிகளும் இருந்தும் வறுமை காரணமாக உயர்கல்வி வாய்ப்பினை இழக்கின்றனர். குடும்பச் சூழல் மற்றும் வறுமை காரணமாக உயர்கல்விக்குச் செல்வது மிகவும் குறைவாகவே உள்ளது.
அதேபோல், CEWET புலமைப்பரிசில் பெறும் மாணவர்களின் எண்ணிக்கையை இரட்டிப்பாக அதிகரித்தது மட்டுமல்லாமல், வழங்குகின்ற தொகையையும் அதிகரிப்பது என்பது உண்மையிலேயே வரவேற்கத்தக்க, மகிழ்ச்சிக்குரிய விடயமாகும்.
எனவே, இந்திய அரசு வழங்கும் இந்தப் புலமைப்பரிசில் தொகையை நீங்கள் சரியான முறையில் பயன்படுத்தி, உங்களை நீங்கள் பட்டை தீட்டிக்கொண்டு ஒரு கல்வியலாளராக உங்களை மாற்றிக்கொள்ளும்போது, மலையக சமூகம் ஏனைய சமூகங்களுக்கு நிகராக வரக்கூடிய சமூகமாக மாறும்.
எம் சமூகத்தில் பல பேராசிரியர்கள், பொறியியலாளர்கள், வைத்தியர்கள், கல்வியலாளர்கள் எனப் பலர் உயர்ஸ்தானத்தில் இருந்தாலும் கூட, எண்ணிக்கை அளவில் மிகவும் குறைவாகவே இருக்கின்றது. எனவே, எண்ணிக்கை அளவில் அதனை அதிகரிக்கும் பொறுப்பும் கடப்பாடும் எமக்கு இருக்கின்றது.
எனவே, ஒட்டுமொத்த சமூகமும் கடமையை உணர்ந்து செயற்படும்போது, இந்த நாட்டில் மிளிரக்கூடிய சமூகமாக எமது மலையக சமூகம் மாறும். அதற்காக மலையகக் கல்வியில் பாரிய மாற்றத்தை ஏற்படுத்தக்கூடிய நடவடிக்கைகளை நாம் வேகமாக முன்னெடுத்து வருகிறோம்" என்றார்.












