கொழும்பின் புறநகரான கல்கிஸ்ஸ, பீரிஸ் வீதி பகுதியில் உள்ள வீடொன்றை உடைத்து 2 கோடியே 40 இலட்சம் ரூபாவுக்கும் அதிக பெறுமதியான பணம் மற்றும் தங்க நகைகளை கொள்ளையிட்டதாகக் கூறப்படும் 29 வயதுடைய சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். தெஹிவளை, ஓபன் பகுதியில் வசிக்கும் குறித்த சந்தேகந…
கொழும்பின் புறநகரான கல்கிஸ்ஸ, பீரிஸ் வீதி பகுதியில் உள்ள வீடொன்றை உடைத்து 2 கோடியே 40 இலட்சம் ரூபாவுக்கும் அதிக பெறுமதியான பணம் மற்றும் தங்க நகைகளை கொள்ளையிட்டதாகக் கூறப்படும் 29 வயதுடைய சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
தெஹிவளை, ஓபன் பகுதியில் வசிக்கும் குறித்த சந்தேகநபர், கடந்த 20ஆம் திகதி கல்கிஸ்ஸ, தர்மபால வீதியில் வைத்து குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்படும் போது, ஒரு கோடி ரூபாவுக்கும் அதிக பெறுமதியான தங்க நகைகளின் ஒரு பகுதியும் 15,000 மில்லிகிராம் ஹெரோயினும் அவரிடமிருந்து கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வீட்டை உடைத்து கொள்ளை
கடந்த 18ஆம் திகதி குறித்த வீட்டில் வசிப்பவர்கள் உறவினர் ஒருவரின் நெதிமால பகுதியில் உள்ள வீட்டுக்குச் சென்றுள்ளனர்.
மறுநாள், 19ஆம் திகதி வீடு திரும்பியபோது, வீட்டில் இருந்த பொருட்கள் கலைக்கப்பட்டிருந்ததை அவதானித்துள்ளனர்.
இதனையடுத்து மேற்கொள்ளப்பட்ட சோதனையில், வீட்டின் மேல் மாடியில் உள்ள ஜன்னல் ஒன்றை உடைத்து சந்தேகநபர் வீட்டுக்குள் நுழைந்துள்ளமை தெரியவந்துள்ளது.
அங்கிருந்து ஒரு கோடி ரூபா பணமும், ஒரு கோடியே 40 இலட்சம் ரூபாவுக்கும் அதிக பெறுமதியான தங்க நகைகளும் கொள்ளையிடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கொள்ளையில் ஈடுபட்ட சந்தேகநபர் அதே ஜன்னல் வழியாக தப்பிச் சென்றுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது. இதனைத் தொடர்ந்து வீட்டின் உரிமையாளர்கள் கல்கிஸ்ஸ பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளனர்.
முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார், சுற்றுப்புறங்களில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து சந்தேகநபரை அடையாளம் கண்டு கைது செய்துள்ளனர்.
கொள்ளையிட்ட பணத்தில் ஆடம்பர பொருட்கள் கொள்வனவு
கொள்ளையிடப்பட்ட பணத்தில் சுமார் ஒரு கோடி ரூபாவை செலவிட்டு, 18 இலட்சம் ரூபாவுக்கும் அதிக பெறுமதியான மோட்டார் சைக்கிளொன்றையும், அப்பிள் நிறுவனத்தைச் சேர்ந்த மூன்று கையடக்கத் தொலைபேசிகளையும் மேலும் ஒரு கையடக்கத் தொலைபேசியையும் சந்தேகநபர் கொள்வனவு செய்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
எஞ்சிய பணத்தில் ஒரு பகுதியை இரவு நேர கேளிக்கை விடுதிகளில் செலவிட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சந்தேகநபர் போதைப்பொருள் பாவனைக்கு அடிமையானவர் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளதுடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.












