மட்டக்களப்பு மாவட்ட மீன்பிடித்துறை எதிர்கொள்ளும் சவால்கள், கடற்தொழிலாளர்களின் பிரச்சினைகள் மற்றும் கடற்தொழில் அபிவிருத்தி குறித்த ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் மட்டக்களப்பு பழைய மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது. மட்டக்களப்பு மாவட்டத்தில் மீன்பிடி மற்றும் நீர்வாழ் உயிரின வளர்ப்புத் த…

மட்டக்களப்பு மாவட்ட மீன்பிடித்துறை எதிர்கொள்ளும் சவால்கள், கடற்தொழிலாளர்களின் பிரச்சினைகள் மற்றும் கடற்தொழில் அபிவிருத்தி குறித்த ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் மட்டக்களப்பு பழைய மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் மீன்பிடி மற்றும் நீர்வாழ் உயிரின வளர்ப்புத் துறைகள் எதிர்கொள்ளும் சவால்களுக்கு உடனடியாகத் தீர்வு காணும் வகையிலான மாவட்ட மீன்பிடி ஒருங்கிணைப்புக் குழுவின் 2வது அமர்வு இன்றைய தினம் (14.08.2026) மாவட்ட அரச அதிபர் ஜே.எஸ்.அருள்ராஜின் ஒருங்கிணைப்பில் நடைபெற்றது. கடற்றொழில் நீரியல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தலைமையில் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் பிரதேச அபிவிருத்தி குழு தலைவருமான கந்தசாமி பிரபுவின் பங்கேற்புடன் நடைபெற்றது.தொழிலாளர்கள் சந்திக்கும் முக்கிய சவால்கள் இதன்போது கடற்றொழில் மற்றும் நீர்வாழ் உயிரின வளர்ப்புத்துறை சார்ந்த தொழிலாளர்கள் சந்திக்கும் முக்கிய சவால்கள் குறித்து விரிவாக ஆராயப்பட்டதுடன் கடந்த 16.07.2025 அன்று நடைபெற்ற முதலாவது அமர்வில் எடுக்கப்பட்ட தீர்மானங்களின் தற்போதைய முன்னேற்றம் குறித்து மீளாய்வு செய்யப்பட்டது.அத்துடன் சுருக்கு வலை பயன்பாடு உள்ளிட்ட சட்டவிரோத மீன்பிடி முறைகளால் பாரம்பரிய மற்றும் சிறு அளவிலான கடற்தொழிலாளர்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். இதனைத் தடுப்பதற்காக கடற்படை, பொலிஸார், கடலோரப் பாதுகாப்புப் படையினர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அடங்கிய ஒருங்கிணைந்த கூட்டுக் பொறிமுறை குறித்து கலந்துரையாடப்பட்டது.

கரைவலை தொழில் என்பது ஒரு பாரம்பரியத் தொழில் என்பதால் அதனை முற்றிலும் தடை செய்யாமல், தகுந்த கட்டுப்பாடுகளுடன் தொடர அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் கடந்த காலத்தில் எழுந்த சர்ச்சைகள் மற்றும் போராட்டங்களைத் தொடர்ந்து, தேசிய நீர்வள ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி முகவர் நிலையத்திடம் இது குறித்த ஆய்வு ஒப்படைக்கப்பட்டது. மேலும் விரிவான ஆய்வுகளுக்காக ஒரு வருட கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது குறித்து ஆராயப்பட்டது.

ஆள் பற்றாக்குறை காரணமாக கரைவலைக்கு பதிலாக டிராக்டர்கள் மற்றும் வின்ச்இயந்திரங்களைப் பயன்படுத்தி, கரை எல்லைக்கு அப்பால் (சுமார் 6 - 7 நௌட்டிக்கல் மைல் வரை) சென்று அதிகளவில் மீன்களை அள்ளிச் செல்வதால், சிறு கடற்தொழிலாளர்கள் கடுமையாகப் பாதிக்கப்படுவதாக குற்றம் சாட்டப்பட்டது.தொடர் பேச்சுவார்த்தைகள் எனவே, 1.5 நௌட்டிக்கல் மைலுக்கு அப்பால் கரைவலை பயன்பாட்டிற்கு இயந்திரங்களைப் பயன்படுத்துவதைத் தடுக்க நடவடிக்கை எடுக்க உடன்பாடு எட்டப்பட்டுள்ளதுடன் இது தொடர்பில் தொடர்ந்து பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்படுதாகவும் இதன்போது அமைச்சர் தெரிவித்தார்.

கடலில் மீன்பிடிப்பதை மட்டும் நம்பியிருக்காமல், கடல் மற்றும் குளங்களில் 'கூண்டு மீன் வளர்ப்பு' முறையை ஊக்குவிக்கவும், கிழக்கு மாகாணத்தில் உள்ள ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களைப் பயன்படுத்தி இராள் பண்ணைகளை அமைப்பது குறித்தும் இதன்போது ஆராயப்பட்டது.

கிழக்கு மாகாணத்தின் ஜிடிபி பங்களிப்பு வட மாகாணத்தை விட அதிகமாக இருந்தபோதிலும், வறுமை நிலவும் மாவட்டமாக மட்டக்களப்பு உள்ளது.எனவே, இரால் பண்ணை திட்டங்கள் மூலம் ஆயிரக்கணக்கான இளைஞர், யுவதிகளுக்கு வேலைவாய்ப்பை வழங்க முடியும். காணி ஒதுக்கீட்டின் போது, வெளி முதலீட்டாளர்களுக்கு முன் உள்ளூர் மக்களுக்கு தலா 1 ஏக்கர் வீதம் காணி வழங்கி வாழ்வாதாரத்தை உயர்த்த முன்னுரிமை அளிப்பதற்கான வேலைத்திட்டங்களை முன்னெடுக்குமாறு அதிகாரிகளுக்கு பணிப்புரைகள் விடுக்கப்பட்டன.