2008 மற்றும் 2009ஆம் ஆண்டுகளில் கப்பம் கோரி 11 இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் பல முக்கிய விபரங்கள் வெளிக்கொணரப்பட்டுள்ளன. குற்றப்புலனாய்வுத் திணைக்களம் (CID) மேற்கொண்ட விசாரணைகளில், கடத்தப்பட்ட இளைஞர்கள் திருகோணமலை கடற்படையின் கன்சைட் (Gunsite) முகாம…

2008 மற்றும் 2009ஆம் ஆண்டுகளில் கப்பம் கோரி 11 இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் பல முக்கிய விபரங்கள் வெளிக்கொணரப்பட்டுள்ளன.  குற்றப்புலனாய்வுத் திணைக்களம் (CID) மேற்கொண்ட விசாரணைகளில், கடத்தப்பட்ட இளைஞர்கள் திருகோணமலை கடற்படையின் கன்சைட் (Gunsite) முகாமில் அடைத்து வைக்கப்பட்டிருந்தமை நீதிமன்றத்தில் உறுதி. அத்துடன், அங்குள்ள சுவரொன்றில் எழுதப்பட்டிருந்த முகவரி கடத்தப்பட்ட சாந்த சமரவீர என்பவரின் கையெழுத்து என்பதும் கண்டறியப்பட்டுள்ளது. இந்த விசாரணைகளின் போது, குறித்த முகாமில் ஆறு பெண்களும் சட்டவிரோதமாக அடைத்து வைக்கப்பட்டிருந்ததுடன், அவர்களில் ஐவர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.கொடூரக் கொலைகள்.. தடுப்பில் வைக்கப்பட்டிருந்த பெண்களில் ஒருவர் கர்ப்பிணியாக இருந்ததாகவும், அவர் விடுவிக்கப்பட்டால் கடற்படை மீது குற்றம் சுமத்தப்படும் என்ற அச்சத்தினால் கொலை செய்யப்பட்டதாகவும் குற்றப்புலனாய்வு அதிகாரிகள் வெளிப்படுத்தியுள்ளனர். போதிய ஆதாரங்கள் இன்மையால் திருகோணமலை நீதவான் நீதிமன்றத்தில் இடைநிறுத்தப்பட்டிருந்த வழக்குகள், இந்தத் தகவல்கள் வெளிவந்ததையடுத்து மீண்டும் புதுப்பிக்கப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளை குற்றப்புலனாய்வு விசாரணைப் பிரிவுக்கு மாற்றுமாறு பொலிஸ் மா அதிபருக்கு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

கடற்படைக்குள் இயங்கிய கப்பம் பெறும் கும்பலினால் இழைக்கப்பட்ட இந்தக் கொடூரக் குற்றம் தொடர்பில், முன்னாள் கடற்படை தளபதிகளான வசந்த கரன்னாகொட, ரவீந்திர விஜேகுணரத்ன மற்றும் நிஷாந்த உலுகேதென்ன ஆகிய மூவருக்கும் எதிராகக் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன. சட்டமா அதிபரினால் 667 குற்றச்சாட்டுகளின் கீழ் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. முன்னாள் கடற்படை தளபதி வசந்த கரன்னாகொடவுக்கு இந்தக் கடத்தல்கள் பற்றித் தெரிந்திருந்ததாகவும், தெஹிவளையில் 5 இளைஞர்கள் கடத்தப்பட்ட சம்பவத்தில் அவரது தனிப்பட்ட பாதுகாப்பு அதிகாரி நேரடியாகச் சம்பந்தப்பட்டிருப்பதாகவும் அதிகாரிகள் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.