அரசியலமைப்பு திருத்தத்தை உடனடியாக திரும்பப்பெற தவறினால் கோட்டாபய ராஜபக்சவுக்கு ஏற்பட்ட நிலையே தற்போதைய அரசாங்கத்துக்கும் ஏற்படும் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் மான்னப்பெரும தெரிவித்துள்ளார். கொழும்பில் வெள்ளிக்கிழமை (21) ஊடகவியலாளர் சந்திப்பை ஏற்பாடு செய்து அதில் கலந்த…

அரசியலமைப்பு திருத்தத்தை உடனடியாக திரும்பப்பெற தவறினால் கோட்டாபய ராஜபக்சவுக்கு ஏற்பட்ட நிலையே தற்போதைய அரசாங்கத்துக்கும் ஏற்படும் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் மான்னப்பெரும தெரிவித்துள்ளார்.

கொழும்பில் வெள்ளிக்கிழமை (21) ஊடகவியலாளர் சந்திப்பை ஏற்பாடு செய்து அதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். மேலும் தெரிவிக்கையில், நம்பிக்கையை ஏற்படுத்திய ஆட்சி கடந்த காலங்களில் ஆட்சி அமைத்த ஒவ்வொரு தலைவரும் மக்களுக்கு ஏதோ ஒரு வழியில் நம்பிக்கையை ஏற்படுத்தியே ஆட்சியை முன்னெடுத்தனர்.

ஆனால், தற்போதைய அரசாங்கத்திடம் மக்கள் ஆதரவை பெறக்கூடிய எந்தவொரு திட்டமும் இல்லை. தேசிய மக்கள் சக்திக்கு வாக்களித்தவர்கள் இதனை நன்றாக புரிந்து கொண்டுள்ளனர்.

பொருளாதாரத்தைச் சீரமைக்க முடியாததால், குற்றப் புலனாய்வுத்துறை மற்றும் பொலிஸ் துறையைப் பயன்படுத்தி, முறையான சாட்சியங்கள் இல்லாமல் எதிர்கட்சியினரை கைது செய்து சிறையில் அடைத்து அரசாங்கம் தனது இருப்பை தக்கவைக்க முயற்சிக்கின்றது.

தற்போது அரசாங்கம் நீதித்துறையையும் தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவர அரசியலமைப்பு திருத்தங்களை மேற்கொள்ள முயற்சிக்கிறது. அரசியலமைப்பு திருத்தத்துக்கு கடும் எதிர்ப்பு

இந்த அரசியலமைப்பு திருத்தத்துக்கு நாட்டின் மகாநாயக்க தேரர்கள், இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் மற்றும் சர்வதேச சமூகமும் கடும் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர்.

அரசாங்கம் சர்வதேசத்தை பகைத்துக்கொள்வதால், வெளிநாடுகளிலிருந்து கிடைக்கும் நிதியுதவிகள் தடைப்பட்டு நாடு தனிமைப்படுத்தப்படும்.

எனவே, அரசாங்கம் ஜனநாயக விரோத அரசியலமைப்பு திருத்தத்தை உடனடியாக திரும்பப்பெற தவறினால், இந்த சட்டமூலத்தை வாக்கெடுப்புக்கு விட்டாலும், அதில் வென்றாலும் அல்லது தோற்றாலும் அரசாங்கம் மக்களால் நிராகரிக்கப்படும். இறுதியில் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு ஏற்பட்ட நிலையே இந்த அரசாங்கத்துக்கும் ஏற்படும் என அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.