லண்டன் ஹாரோவின் தெற்கு பகுதிகளில் வசிக்கும் மற்றும் அப்பகுதிக்கு வருகை தரும் தமிழர்கள் கடந்த சில மாதங்களாக எதிர்கொண்ட வாகன நிறுத்தக் கட்டணங்கள் மற்றும் அபராதச் சீட்டு தொடர்பான பிரச்சினைகளுக்கு சாதகமான தீர்வு கிடைத்துள்ளது.தெற்கு ஹாரோ பகுதிகளில் வாகன நிறுத்த விதிமுறைகள் கடுமையாக்…

லண்டன் ஹாரோவின் தெற்கு பகுதிகளில் வசிக்கும் மற்றும் அப்பகுதிக்கு வருகை தரும் தமிழர்கள் கடந்த சில மாதங்களாக எதிர்கொண்ட வாகன நிறுத்தக் கட்டணங்கள் மற்றும் அபராதச் சீட்டு தொடர்பான பிரச்சினைகளுக்கு சாதகமான தீர்வு கிடைத்துள்ளது.தெற்கு ஹாரோ பகுதிகளில் வாகன நிறுத்த விதிமுறைகள் கடுமையாக்கப்பட்டதைத் தொடர்ந்து, வார இறுதி நாட்களில் பொருட்கள் வாங்குவதற்கும் உறவினர்களை சந்திப்பதற்கும் அப்பகுதிக்கு சென்ற பல தமிழர்கள் தொடர்ச்சியான அபராதச் சீட்டுகளை எதிர்கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த விவகாரம் தொடர்பில் ஹாரோ தமிழ்ச் சங்கத்தின் நிறுவனர் மற்றும் அறங்காவலர் குழுத் தலைவர் குமாரசாமி இந்திரஜித் குரல் கொடுத்ததுடன், சமூக வலைத்தளங்கள் வாயிலாகவும் பிரச்சினையை பொதுமக்களின் கவனத்துக்கு கொண்டு வந்துள்ளார்.இதனையடுத்து, ஹாரோ நகரசபைக்கு மனுக்கள் அனுப்பப்பட்டதுடன், அதிகாரிகளுடன் விசேட ஆலோசனைக் கூட்டத்திற்கும் ஏற்பாடு செய்யப்பட்டது.

இதன் தொடர்ச்சியாக ஹாரோ நகரசபைத் தலைவர் பால் ஆஸ்போர்ன் (Paul Osborn), பொதுப் பாதுகாப்பு மற்றும் அமலாக்கப் பிரிவின் மூலோபாயத் தலைவர் எம்மா ஃபேசி (Emma Phasey) மற்றும் நகரசபை அதிகாரி சுதேஷ் பாசி ஆகியோர் தமிழ் சமூகப் பிரதிநிதிகளை நேரில் சந்தித்து பிரச்சினைகள் தொடர்பில் கலந்துரையாடியுள்ளனர்.

தமிழ் சமூகத்தினர் முன்வைத்த நியாயமான கோரிக்கைகள் மற்றும் தனிப்பட்ட சூழ்நிலைகளை கருத்தில் கொண்டு, இதுவரை வழங்கப்பட்ட பல வாகன நிறுத்த அபராதச் சீட்டுகளை ஹாரோ நகரசபை ரத்து செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

தமிழ் மக்களின் கோரிக்கைகளுக்கு செவிசாய்த்து உடனடியாகத் தீர்வு வழங்கிய ஹாரோ நகரசபைக்கும் அதன் அதிகாரிகளுக்கும் ஹாரோ தமிழ்ச் சங்கம் நன்றி தெரிவித்துள்ளது.

இதேவேளை, தெற்கு ஹாரோ பகுதியில் வாகன நிறுத்த அபராதச் சீட்டு பெற்றுள்ளவர்களில், தங்களுக்கு நியாயமான விதிவிலக்கான காரணங்கள் இருப்பதாகக் கருதுபவர்கள், மேலதிக தகவல்கள் மற்றும் வழிகாட்டல்களுக்காக ஹாரோ நகரசபை அதிகாரிகளை தொடர்புகொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.