கந்தளாய் நகரில் அரசாங்கத்தின் நியாயமற்ற மற்றும் அநீதியான வரிப் கொள்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், மக்கள் மீது சுமத்தப்பட்டுள்ள கடுமையான பொருளாதாரச் சுமைகளைக் குறைக்க வலியுறுத்தியும் கவனயீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. 'மக்கள் போராட்ட இயக்கம்' சார்பில் கந்தளாய் நக…
கந்தளாய் நகரில் அரசாங்கத்தின் நியாயமற்ற மற்றும் அநீதியான வரிப் கொள்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், மக்கள் மீது சுமத்தப்பட்டுள்ள கடுமையான பொருளாதாரச் சுமைகளைக் குறைக்க வலியுறுத்தியும் கவனயீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. 'மக்கள் போராட்ட இயக்கம்' சார்பில் கந்தளாய் நகரில் இன்று (16) கவனயீர்ப்புப் போராட்டமும் கையெழுத்துச் சேகரிக்கும் நடவடிக்கையும் முன்னெடுக்கப்பட்டது. போராட்டம் குறித்து மக்கள் போராட்ட இயக்கத்தின் பிரதிநிதி தட்சில தேசப்பிரிய கருத்து தெரிவிக்கையில்:
"தற்போதைய ஜனாதிபதி முன்னர் வேட்பாளராக இருந்தபோது சுகாதாரம், உணவு மற்றும் கல்விக்கான வரிகள் நாகரிகமடைந்த உலகிற்குப் பொருத்தமானவை அல்ல என்றும், ஆட்சிக்கு வந்தவுடன் அவ்வரிகள் முற்றாக நீக்கப்பட்டு பூஜ்ஜியமாக்கப்படும் என்றும் ஊடகங்கள் வாயிலாக வாக்குறுதி அளித்திருந்தார்.அநீதியான வரி ஆனால், இன்று நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையைப் பெற்று ஆட்சியில் இருக்கும் அவர், கடந்த இரண்டு ஆண்டுகளாகச் சுகாதாரம் மற்றும் கல்விக்கு மட்டுமன்றி அத்தியாவசிய உணவுப் பொருட்களுக்கும் தொடர்ந்து வரிகளை அதிகரித்து வருகிறார்.எதிர்வரும் வரவு செலவுத் திட்டத்திலும் மீண்டும் வரிகள் உயர்த்தப்படவுள்ளதாகச் சுட்டிக்காட்டிய அவர், அரசாங்கம் பெரிய நிறுவனங்களுக்கும், பெரிய தொழிலதிபர்களுக்கும், தமக்கு நெருக்கமான செல்வந்தர்களுக்கும் வரி நிவாரணங்களை வழங்கிவிட்டு, ஏழை எளிய பொதுமக்கள் மீது பல்வேறு வரிகளைச் சுமத்தி அவர்களைத் தொடர்ச்சியாகப் பீடித்து வருவதாகக் குற்றம் சாட்டினார்.
நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டு வரும் 'அநீதியான வரிக்கு எதிரான வாரத்தின்' ஒரு பகுதியாகவே கந்தளாய் நகரில் இந்நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. அரசாங்கத்தின் இந்த மக்கள் விரோத வரி கொள்கைக்கு எதிராகப் பொதுமக்கள் தங்கள் எதிர்ப்பைப் பதிவு செய்யும் வகையில், எதிர்ப்புப் பதாகையில் கையெழுத்துச் சேகரிக்கும் நடவடிக்கைகளும் இதன்போது இடம்பெற்றன.












