தேசிய மற்றும் அபிவிருத்தி லொத்தர் சபைகளின் சீட்டிழுப்பு எண்களை அடிப்படையாகக் கொண்டு முன்னெடுக்கப்படும் சட்டவிரோத சூதாட்டம் காரணமாக நாட்டில் பாரிய சமூகப் பேரழிவு உருவாகியுள்ளதாக தேசிய லொத்தர் சபையின் தலைவர் சிறில் எண்டனி பெரேரா தெரிவித்துள்ளார்.தேசிய மற்றும் அபிவிருத்தி லொத்தர் ச…
தேசிய மற்றும் அபிவிருத்தி லொத்தர் சபைகளின் சீட்டிழுப்பு எண்களை அடிப்படையாகக் கொண்டு முன்னெடுக்கப்படும் சட்டவிரோத சூதாட்டம் காரணமாக நாட்டில் பாரிய சமூகப் பேரழிவு உருவாகியுள்ளதாக தேசிய லொத்தர் சபையின் தலைவர் சிறில் எண்டனி பெரேரா தெரிவித்துள்ளார்.தேசிய மற்றும் அபிவிருத்தி லொத்தர் சபைகளின் அதிகாரிகள் கோப் (COPE) உபகுழு முன்னிலையில் அழைக்கப்பட்டிருந்த சந்தர்ப்பத்தில், இந்த சட்டவிரோத சூதாட்டத்தின் தீவிரம் தொடர்பில் அவர் விரிவாக விளக்கமளித்துள்ளார். போதைப்பொருள் பாவனைக்கு அடுத்தபடியாக சமூகத்தில் மிகவும் வினாசகரமான நிலைமையை இந்தச் சூதாட்டம் ஏற்படுத்தி வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
சுமார் 4 முதல் 5 ஆண்டுகளுக்கு முன்னர் கிராமப்புறங்களில் 100 ரூபாய் போன்ற சிறிய தொகைகளில் ஆரம்பிக்கப்பட்ட ‘கட்டம் வெட்டும்’ என அழைக்கப்படும் இந்தச் சூதாட்டம், தற்போது பாரிய அளவில் வளர்ச்சியடைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
பொருளாதார நடவடிக்கைகளுக்கு ஏற்ப பந்தயத் தொகையும் மாறுபடுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, நெல் அறுவடை நடைபெறும் மனம்பிட்டி போன்ற பகுதிகளில் ஒரு கட்டத்திற்காக சுமார் 30,000 ரூபாய் வரை பந்தயம் கட்டப்படுவதாகவும், இரத்தினபுரி போன்ற மாணிக்கக்கல் வர்த்தகப் பகுதிகளில் ஒரு கட்டத்தின் பெறுமதி ஒரு இலட்சம் ரூபாயைத் தாண்டுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சூதாட்ட முறையில் 0 முதல் 9 வரையிலான எண்களில் இருந்து இரண்டு எண்கள் தெரிவு செய்யப்பட்டு, அன்றைய தினம் வெளியாகும் லொத்தர் சீட்டின் கடைசி இரண்டு இலக்கங்களை அடிப்படையாகக் கொண்டு பந்தயம் மேற்கொள்ளப்படுவதாக விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
தேசிய மற்றும் அபிவிருத்தி லொத்தர் சபைகளின் உத்தியோகபூர்வ சீட்டிழுப்புகள் இரவு 7.30 மணியளவில் இடம்பெறுகின்றன. எனினும், ஒரு மாதத்திற்குத் தேவையான சீட்டிழுப்புகள் ஒரே தடவையில் நடத்தப்பட்டு, அவை தினமும் வெளியாகின்றன என்ற போலியான தகவல்கள் பரப்பப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், WhatsApp குழுக்கள் ஊடாக இந்த சட்டவிரோத சூதாட்டம் ஒழுங்கமைக்கப்பட்ட முறையில் முன்னெடுக்கப்படுவதாகவும் கோப் உபகுழுவின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளது.
இந்த சட்டவிரோத சூதாட்டத்தின் காரணமாக பலர் தங்களது காணிகள் மற்றும் சொத்துக்களை இழந்து நிர்க்கதிக்குள்ளாகியுள்ளதாக தேசிய லொத்தர் சபையின் தலைவர் தெரிவித்துள்ளார்.அத்துடன், கணவன்மார்கள் இந்தச் சூதாட்டத்திற்கு அடிமையாகியதன் காரணமாக குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இதுதொடர்பில் பெண்களிடமிருந்து தொடர்ச்சியாக முறைப்பாடுகள் கிடைத்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த மோசடி நடவடிக்கைகள் தொடர்பில் பொலிஸ் மா அதிபர், அரச புலனாய்வு சேவை மற்றும் மத்திய ஊழல் குற்றவியல் பிரிவு உள்ளிட்ட தரப்புகளிடம் ஏற்கனவே முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும், எனினும் இதுவரை எதிர்பார்க்கப்பட்ட அளவில் நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
தேசிய லொத்தர் சட்டத்தின் கீழ், சட்டபூர்வமான லொத்தர் குலுக்கல்கள் தொடர்பில் மட்டுமே நிறுவனத்தினால் நேரடியாக சட்டத்தை நடைமுறைப்படுத்த முடியும் என்பதால், நிதி அமைச்சின் நேரடி ஆதரவின்றி இந்த சட்டவிரோத சூதாட்டத்திற்கு எதிராக சட்ட நடவடிக்கைகளை முன்னெடுப்பது கடினமானதாக உள்ளதாகவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
இந்த சட்டவிரோத சூதாட்டம் மேலும் விரிவடைந்தால், தேசிய மற்றும் அபிவிருத்தி லொத்தர் சபைகளின் வணிக நிலைத்தன்மை பாதிக்கப்படுவதுடன், சாதாரண மக்களின் பொருளாதார நிலை மற்றும் குடும்ப வாழ்க்கையும் கடுமையாகப் பாதிக்கப்படும் என தேசிய லொத்தர் சபையின் தலைவர் எச்சரித்துள்ளார்.












