இலங்கையில் நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை மேலும் இரண்டு வருடங்களால் அதிகரிப்பதற்கு முன்மொழியப்பட்டுள்ள அரசியலமைப்புத் திருத்தம் தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபை இலங்கை அரசாங்கத்துக்கு விசேட கடிதமொன்றை அனுப்பியுள்ளது.நீதிபதிகள் மற்றும் சட்டத்தரணிகளின் சுதந்திரம் தொடர்பான ஐக்கிய நாடுகள…

இலங்கையில் நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை மேலும் இரண்டு வருடங்களால் அதிகரிப்பதற்கு முன்மொழியப்பட்டுள்ள அரசியலமைப்புத் திருத்தம் தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபை இலங்கை அரசாங்கத்துக்கு விசேட கடிதமொன்றை அனுப்பியுள்ளது.நீதிபதிகள் மற்றும் சட்டத்தரணிகளின் சுதந்திரம் தொடர்பான ஐக்கிய நாடுகள் சபையின் விசேட பிரதிநிதி மார்கரெட் சாட்டர்வைட் (Margaret Satterthwaite) இந்தக் கடிதத்தை அனுப்பியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போதைய அரசியலமைப்பின் பிரகாரம், உயர் நீதிமன்ற நீதியரசர்களின் ஓய்வுபெறும் வயது 65 ஆகவும், மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்களின் ஓய்வுபெறும் வயது 63 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.முன்மொழியப்பட்டுள்ள அரசியலமைப்புத் திருத்தத்தின் மூலம், உயர் நீதிமன்ற நீதியரசர்களின் ஓய்வுபெறும் வயதை 67 ஆகவும், மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்களின் ஓய்வுபெறும் வயதை 65 ஆகவும் உயர்த்துவதற்கு யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.

எனினும், அவசரமாக மேற்கொள்ளப்படும் இத்தகைய அரசியலமைப்புத் திருத்தம் நீதித்துறையின் சுதந்திரத்திற்கும், நியாயமான விசாரணைக்கான உரிமைக்கும் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என ஐக்கிய நாடுகள் சபையின் விசேட பிரதிநிதி தனது கவலையை வெளிப்படுத்தியுள்ளார்.

குறிப்பாக, முன்மொழியப்பட்டுள்ள மாற்றங்கள் எதிர்காலத்தில் நியமிக்கப்படவுள்ள நீதிபதிகளுக்கு மாத்திரம் பொருந்தாமல், தற்போது பதவியில் உள்ள நீதிபதிகளின் பதவிக்காலத்துக்கும் உடனடியாகப் பொருந்தும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளமை கவலைக்குரிய விடயம் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், நீதித்துறை தொடர்பான முக்கியமான சட்ட மற்றும் அரசியலமைப்பு மாற்றங்கள் உரிய கலந்தாலோசனைகள் மற்றும் வெளிப்படையான நடைமுறைகளின் ஊடாக முன்னெடுக்கப்பட வேண்டுமெனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

முறையான கலந்தாலோசனைகள் இன்றி இத்தகைய திருத்தங்கள் மேற்கொள்ளப்படுமானால், நீதித்துறையின் சுயாதீனம் தொடர்பில் பொதுமக்கள் மத்தியில் சந்தேகங்கள் ஏற்படுவதுடன், நீதித்துறை மீதான நம்பிக்கையும் பாதிக்கப்படக்கூடும் என ஐ.நா. விசேட பிரதிநிதி எச்சரித்துள்ளார்.

இதனையடுத்து, நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை அதிகரிப்பதற்கான அரசியலமைப்புத் திருத்தத்தை முன்வைப்பதற்கான காரணங்கள், அதன் சட்டரீதியான அடிப்படை மற்றும் நீதித்துறையின் சுதந்திரத்தைப் பாதுகாப்பதற்காக அரசாங்கம் மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் தொடர்பில் தெளிவுபடுத்துமாறு ஐக்கிய நாடுகள் சபை இலங்கை அரசாங்கத்திடம் கோரியுள்ளது.

நீதித்துறையின் சுயாதீனம் மற்றும் நீதிபதிகளின் பதவிக்காலம் தொடர்பான இந்த விவகாரம், இலங்கையில் முன்மொழியப்பட்டுள்ள அரசியலமைப்புத் திருத்தம் தொடர்பான முக்கியமான சர்வதேச கவனமாக பார்க்கப்படுகிறது.