அரசு மக்களுக்குச் சிறந்த சேவையைத்தான் ஆற்றி வருவதாகக் கூறினால், உடனடியாக மாகாண சபைத் தேர்தலை நடத்துமாறு தான் சவால் விடுவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார். இதன் மூலம் அரசின் மீது மக்களுக்குள்ள செல்வாக்கினை அறிந்துகொள்ள முடியும் என்றும் அவர் குறிப்பிட்டார். அம்…
அரசு மக்களுக்குச் சிறந்த சேவையைத்தான் ஆற்றி வருவதாகக் கூறினால், உடனடியாக மாகாண சபைத் தேர்தலை நடத்துமாறு தான் சவால் விடுவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார். இதன் மூலம் அரசின் மீது மக்களுக்குள்ள செல்வாக்கினை அறிந்துகொள்ள முடியும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
அம்பாந்தோட்டை திஸ்ஸமகாராம விஜிதபுர பிரதேசத்தில் நடைபெற்ற விவசாயிகளுடனான சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில்,
"விவசாயிகள், மீனவர்கள், தொழிலாளர்கள் மற்றும் தொழில்முனைவோர்கள் என அனைவரும் மாகாண சபைத் தேர்தல் வரும் வரை ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர். இந்நாட்டின் புதிய பயணத்தின் புதிய பாதை, ஐக்கிய மக்கள் சக்தி மூலமாகவே உருவாக்கப்படும்.
நாட்டில் எண்ணற்ற பிரச்சினைகள் காணப்படுகின்ற போதிலும், அரசு உயர்நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதெல்லையை அதிகரிக்க முயல்கின்றது.மக்கள் தெரிவு
நீதிமன்றத்தின் சுதந்திரத்தை அழித்து, சட்டத்தின் ஆட்சியை பலவீனப்படுத்தி, நாட்டில் தனிக் கட்சி ஆட்சியை ஸ்தாபிக்கவே அரசு முற்படுகின்றது.
கடந்த மூன்று தேர்தல்களிலும் பெரும்பான்மையான மக்கள் தெரிவு செய்த ஜே.வி.பி. அரசு தொடர்ச்சியாக வாக்குறுதிகளை மீறி, நாட்டு மக்களை ஏமாற்றி வருகின்றது.இந்த அரசு கின்னஸ் சாதனைப் புத்தகத்திலும் இடம்பெறத்தக்க அளவுக்கு விருது பெற்ற பொய்யாளர்களாக மாறியுள்ளது.
தற்போது கோதுமை மா ஒரு கிலோகிராம் 17 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனால் பாண், பேக்கரி தயாரிப்புகள் மற்றும் மா சார்ந்த தயாரிப்புகள் பாதிக்கப்பட்டு, மக்கள் மேலும் துயரத்தின் பாதாளத்துக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
சர்வதேச நிறுவனம் ஒன்று குறைந்தபட்ச ஊதியம் தொடர்பில் 130 நாடுகளை அடிப்படையாகக் கொண்டு நடத்திய கணக்கெடுப்பில், இலங்கை 120ஆவது இடத்திலுள்ளது. பாகிஸ்தான், நேபாளம், வங்கதேசம் போன்ற நாடுகளும் இலங்கைக்கு முன்னிலையில் உள்ளது.
தொகை மதிப்பு மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களத்தின்படி ஒரு நபர் 30 நாள்கள் வாழ்வதற்கு 17 ஆயிரத்து 315 ரூபா போதும் என்ற தவறான தரவுகளின் அடிப்படையிலேயே அரசு கொள்கைகளை வகுக்கின்றது. நாட்டின் 30 முதல் 40 சதவீதமான மக்கள் ஏழ்மையில் வாடுவதுடன், அஸ்வெசும திட்டமும் வெட்டப்பட்டு வருகின்றது.
புற்றுநோயாளிகளின் உயிரைக் காப்பாற்றும் 900 ரூபா ஊசி மருந்து கள்ளச்சந்தையில் 25 ஆயிரம் ரூபாவுக்கு விற்கப்படுவதால் சுமார் 75 ஆயிரம் நோயாளர்கள் ஆபத்தான நிலையில் உள்ளனர்.
மேலும், ரணசிங்க பிரேமதாஸவின் காலத்தில் ஆரம்பிக்கப்பட்ட ஆடைத் தொழிற்சாலைகள் மூடப்பட்டு வருவதால் பல்லாயிரக்கணக்கான இளையோர்கள் வேலைவாய்ப்பின்றி வீதிக்கு இறங்கி வருகின்றனர்." என்றார்.












