2019 ஆம் ஆண்டு இடம்பெற்ற பயங்கரவாத ஈஸ்டர் தாக்குதல்களுடன் தொடர்புடைய குற்றவாளிகளுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்படுவதனை எதிர்ப்பதாக கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார். ஈஸ்டர் தாக்குதல் விசாரணைகள் தொடர்பில் தற்போதைய அரசாங்கத்தின் கீழ் முன்னெடுக்கப்பட்டு வரும் விசாரணைகள…

2019 ஆம் ஆண்டு இடம்பெற்ற பயங்கரவாத ஈஸ்டர் தாக்குதல்களுடன் தொடர்புடைய குற்றவாளிகளுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்படுவதனை எதிர்ப்பதாக கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார். ஈஸ்டர் தாக்குதல் விசாரணைகள் தொடர்பில் தற்போதைய அரசாங்கத்தின் கீழ் முன்னெடுக்கப்பட்டு வரும் விசாரணைகள் குறித்துத் திருப்தியடைவதாக குறிப்பிட்டுள்ளார். அதேநேரம் மரண தண்டனையை நடைமுறைப்படுத்துவதற்கு எதிர்ப்புத் தெரிவிப்பதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகையின் வழிகாட்டலில் கொழும்பு பேராயர் இல்லத்தினால் அறிக்கை வெளியிட்டுள்ளது. தாக்குதல் தொடர்பில் தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் முறையான விசாரணைகள் குறித்து கொழும்பு மறைமாவட்டம் பூரண திருப்தியடைகிறது. இத்தாக்குதலின் பின்னணியில் உள்ள குற்றவாளிகள் மற்றும் அதற்கு உதவி செய்தவர்கள் அனைவரையும் சட்டத்தின் முன் நிறுத்தி, பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதியைப் பெற்றுத்தர அரசாங்கம் தொடர்ந்து நடவடிக்கை எடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அரசாங்கம் மேற்கொள்ளும் எந்தவொரு விசாரணை அறிக்கை அல்லது விசாரணைச் செயல்முறைகள் தொடர்பில் எழும் புதிய தகவல்களைப் பொதுமக்கள் அறிந்துகொள்ளும் வகையில் தெளிவுபடுத்த வேண்டியது அவசியம் எனக் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. மேலும், இத்தகைய கொடூரமான குற்றங்கள் இனிவரும் காலங்களில் நிகழாமல் தடுப்பதற்கான அதிகபட்ச நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். கத்தோலிக்க திருச்சபையின் மறைக்கல்வி விதிகளின் 2267 ஆம் பிரிவின்படி, மரண தண்டனையானது மனித கண்ணியத்தைப் பாதிக்கும் செயலாகும் என்பதால் அதனை ஏற்றுக்கொள்ள முடியாது எனத் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. அமைதியான சூழலில் மரண தண்டனையை நிறைவேற்றுவது தொடர்பில் ஒருபோதும் உடன்பட முடியாது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. எனினும், இலங்கை நீதித்துறையின் சுயாதீனத் தன்மையை முழுமையாக நம்புவதாகவும், நீதிமன்றங்களின் முடிவுகளில் தலையிடுவது தமது நோக்கமல்ல என்றும் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. கத்தோலிக்கக் கோட்பாடுகளின்படி, மனித உயிரைப் பாதுகாப்பதும், சட்டப்பூர்வமான நீதி அமைப்பின் மூலம் சமூக அமைதியையும் நீதியையும் உறுதிப்படுத்துவதே சரியான வழிமுறையாகும் என அந்த அறிக்கையில் மேலும் வலியுறுத்தப்பட்டுள்ளது.