மஸ்கெலியா பிரதேச வைத்தியசாலையில் நிலவும் குறைபாடுகளை நேரில் பார்வையிட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஜீவன் தொண்டமான், அவற்றுக்கு விரைவான தீர்வுகளை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார். இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான ஜீவன் த…
மஸ்கெலியா பிரதேச வைத்தியசாலையில் நிலவும் குறைபாடுகளை நேரில் பார்வையிட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஜீவன் தொண்டமான், அவற்றுக்கு விரைவான தீர்வுகளை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.
இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமான், நேற்று (12) மஸ்கெலியா பிரதேச வைத்தியசாலைக்கு கண்காணிப்பு விஜயமொன்றை மேற்கொண்டார்.
இதன்போது, வைத்தியசாலையின் தற்போதைய நிலைமை, காணப்படும் குறைபாடுகள் மற்றும் மக்களுக்கு தரமான சுகாதார சேவையை வழங்குவதற்கு தேவையான வசதிகள் தொடர்பில் அதிகாரிகளுடன் அவர் கலந்துரையாடியுள்ளார்.
வைத்தியசாலையின் முன்னாள் மாவட்ட வைத்திய அதிகாரி வைத்தியர் A.R.A. ரிஷானுடன் வைத்தியசாலையின் முக்கிய தேவைகள் தொடர்பில் விரிவாக கலந்துரையாடியதுடன், பல்வேறு பிரச்சினைகள் குறித்தும் ஜீவன் தொண்டமான் கேட்டறிந்துள்ளார்.
வைத்தியசாலையின் சீரான செயற்பாட்டிற்கு காணப்படும் ஊழியர் பற்றாக்குறையை உடனடியாக நிவர்த்தி செய்ய வேண்டியதன் அவசியமும் இதன்போது வலியுறுத்தப்பட்டுள்ளது.
நான்கு மாடிகளைக் கொண்ட மஸ்கெலியா வைத்தியசாலையில் பொருத்தப்பட்டுள்ள இரண்டு மின்தூக்கிகளும் கடந்த ஒன்றரை வருடங்களாக இயங்காத நிலையில் இருப்பதும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. மின்சார இணைப்பை சீரமைத்து அவற்றை விரைவில் பயன்பாட்டுக்கு கொண்டுவருவதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.
மேலும், 70,000க்கும் அதிகமான மக்களுக்கு சேவை வழங்கும் ‘A’ தர வைத்தியசாலையாக இருந்தபோதிலும், முறையான வைத்திய ஆய்வுக்கூட வசதி இல்லாதிருப்பது முக்கிய குறைபாடாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. எனவே, வைத்தியசாலையிலேயே தேவையான ஆய்வுக்கூட வசதிகளை ஏற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
அத்துடன், நோயாளர் காவுவண்டியை முறையாக பராமரிப்பதுடன், அவசர தேவைகளுக்கான மாற்று ஏற்பாடுகளையும் மேற்கொள்ள வேண்டியதன் அவசியம் தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
வைத்தியசாலையில் அடையாளம் காணப்பட்ட குறைபாடுகள் தொடர்பில் நுவரெலியா மாவட்ட செயலாளருக்கு உடனடியாக தொலைபேசி ஊடாக அறிவித்துள்ள ஜீவன் தொண்டமான், பிரச்சினைகளுக்கு விரைவான தீர்வுகளை பெற்றுக்கொள்வதற்காக இன்று (13) மாவட்ட செயலாளரை நேரில் சந்தித்து கலந்துரையாடவுள்ளதாக தெரிவித்துள்ளார்.
இதேவேளை, மஸ்கெலியா வைத்தியசாலைக்கு கர்ப்பிணித் தாய்மார்களின் குழந்தை பரிசோதனைக்கான ஸ்கேன் இயந்திரம் தேவைப்படுவது தொடர்பில் கடந்த மே மாதம் பாராளுமன்றத்தில் குரல் எழுப்பியமைக்காக வைத்திய அதிகாரிகள் ஜீவன் தொண்டமானுக்கு நன்றி தெரிவித்துள்ளனர்.
மஸ்கெலியா மற்றும் அதனைச் சூழவுள்ள தோட்டப் பகுதிகளில் வாழும் மக்களுக்கு தரமானதும் தடையற்றதுமான சுகாதார சேவையை உறுதி செய்வது அவசியம் எனத் தெரிவித்த ஜீவன் தொண்டமான், மக்களின் அடிப்படைத் தேவைகளை நேரில் சென்று கண்டறிந்து, உரிய அதிகாரிகளுடன் கலந்துரையாடி நடைமுறை ரீதியான தீர்வுகளை பெற்றுக்கொடுப்பதே தமது நோக்கம் எனவும் தெரிவித்துள்ளார்.












