மட்டக்களப்பு மாவட்டத்தில் போதைப்பொருள் பாவனையால் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு முன்னெடுக்கப்பட்ட மூன்றாவது கட்ட குறுகியகால சிகிச்சை மற்றும் புனர்வாழ்வு பயிற்சியை வெற்றிகரமாக நிறைவு செய்தவர்கள் குடும்பங்களுடன் இணையும் நிகழ்வு கல்லடி பொலிஸ் பயிற்சிக் கல்லூரியில் அமைந்துள்ள குறுகியகால…

மட்டக்களப்பு மாவட்டத்தில் போதைப்பொருள் பாவனையால் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு முன்னெடுக்கப்பட்ட மூன்றாவது கட்ட குறுகியகால சிகிச்சை மற்றும் புனர்வாழ்வு பயிற்சியை வெற்றிகரமாக நிறைவு செய்தவர்கள் குடும்பங்களுடன் இணையும் நிகழ்வு கல்லடி பொலிஸ் பயிற்சிக் கல்லூரியில் அமைந்துள்ள குறுகியகால புனர்வாழ்வு நிலையத்தில் நடைபெற்றது. தேசிய அபாயகர ஒளடதங்கள் கட்டுப்பாட்டுச் சபையின் மட்டக்களப்பு மாவட்ட இணைப்பாளரும் குறுகியகால சிகிச்சை மற்றும் புனர்வாழ்வு நிலைய பொறுப்பதிகாரி ப.தினேஸ் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.எஸ்.அருள்ராஜ் அவர்களும் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் பணிப்பாளரும், பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளருமான வைத்திய கலாநிதி ஆர். முரளீஸ்வரன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அதிமேதகு ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்படும் "முழு நாடுமே ஒன்றாக – தேசிய போதைப்பொருள் எதிர்ப்பு செயற்றிட்டம்" என்ற தேசிய வேலைத்திட்டத்தின் ஒரு பகுதியாக இப்புனர்வாழ்வு திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது. அதன் ஒரு அங்கமாக மட்டக்களப்பு மாவட்டத்தில் போதைப்பொருள் பாவனையால் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு குறுகியகால சிகிச்சை உளவியல் ஆலோசனைகள் நடத்தை மாற்றப் பயிற்சி தொழில்திறன் மேம்பாடு மற்றும் சமூகத்தில் மீள இணைவதற்கான புனர்வாழ்வு சேவைகள் வழங்கப்பட்டுள்ளது."நீங்கள் தனியாக இல்லை – நாங்கள் உங்களுடன் இருக்கிறோம் இங்கே மாற்றம் உருவாகிறது" என்ற தொனிப்பொருளின் கீழ் இயங்கிவரும் இவ் நிலையம் இலங்கையில் தமிழ் மொழி மூலமாக முழுமையான சிகிச்சை மற்றும் புனர்வாழ்வு சேவைகளை வழங்கும் முதல் மத்திய நிலையமாகத் திகழ்கிறது. இதன் போது மூன்றாவது கட்ட பயிற்சியை நிறைவு செய்தோருக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டதுடன் அவர்கள் சமூகத்தில் சுயமரியாதையுடனும் தன்னம்பிக்கையுடனும் மீண்டும் இணைவதற்கான வழிகாட்டுதல் வழங்கப்பட்டுள்ளது. இந்நிகழ்வில் உரையாற்றிய அதிகாரிகள் போதைப்பொருள் பாவனையிலிருந்து மீண்டவர்களை சமூகத்தில் புறக்கணிக்காமல் அவர்களுக்கு புதிய வாழ்க்கையை உருவாக்குவதற்கான ஆதரவை குடும்பத்தினரும் சமூகமும் வழங்க வேண்டியதன் அவசியம் என இதன் போது வலியுறுத்தப்பட்டது. இதன் போது புனர்வாழ்வு என்பது சிகிச்சையுடன் முடிவடையும் செயல்முறை அல்ல சமூகத்தில் நிலையான வாழ்க்கையை உருவாக்கும் தொடர்ச்சியான பயணமாகும் என்றும் அதிகாரிகள் சுட்டிக்காட்டினர். தற்போதைய அரசாங்கமானது போதைப்பொருள் ஒழிப்பில் தீவிர கவனம் செலுத்தி வருவதனால் கடந்த வருடம் நாடளாவிய ரீதியில் போதைப்பொருள் தொடர்பான குற்றச்சாட்டுகளுக்காக சுமார் 2,90,000 நபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும். இந்நிகழ்வில் உதவி மாவட்ட செயலாளர் ஜீ. பிரணவன், தேசிய அபாயகர ஒளடதங்கள் கட்டுப்பாட்டுச் சபையின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாண இணைப்பாளர் எம்.எம்.ஜி.பி. எம். ரசாட், உதவி பொலிஸ் அத்தியட்சகர் யருள், காத்தான்குடி, ஆயித்தியமலை, ஏறாவூர் மற்றும் வாழைச்சேனை பொலிஸ் நிலையங்களின் பொறுப்பதிகாரிகள், போதைப்பொருள் தடுப்பு உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இந்நிகழ்வில் புனர்வாழ்வு பெற்றவர்களால் தயாரிக்கப்பட்ட கைவினைப் பொருட்கள், கலைப்பணிகள் மற்றும் தொழிற்பயிற்சி ஆக்கங்கள் கண்காட்சிக்காக காட்சிப்படுத்தப்பட்டன. இப்பயிற்சிகள் மூலம் அவர்களை மீண்டும் சமூகத்துடன் இணைத்து சுயதொழில் மற்றும் வாழ்வாதார நடவடிக்கைகளில் ஈடுபடுத்துவதற்கான திறன்களும் வழங்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். போதைப்பொருள் தொடர்பான தகவல்கள் அல்லது முறைப்பாடுகளை பொதுமக்கள் 1927 என்ற உதவி இலக்கத்தின் ஊடாக அறிவிக்க முடியும் என்பதும் இந்நிகழ்வில் நினைவூட்டப்பட்டது.