நேபாளத்தில் ஏற்பட்ட பேரழிவை ஏற்படுத்திய வெள்ளப்பெருக்கைத் தொடர்ந்து, இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலத்தில் உள்ள நதிகளில் இருந்து 7 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. நேபாளத்தின் தெற்குப் பகுதியில் உள்ள சிட்வான் எல்லைக்கு அருகில் அமைந்துள்ள மகாராஜ்கஞ்ச் மற்றும் குஷிநகர் மாவட்டங்க…

நேபாளத்தில் ஏற்பட்ட பேரழிவை ஏற்படுத்திய வெள்ளப்பெருக்கைத் தொடர்ந்து, இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலத்தில் உள்ள நதிகளில் இருந்து 7 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.

நேபாளத்தின் தெற்குப் பகுதியில் உள்ள சிட்வான் எல்லைக்கு அருகில் அமைந்துள்ள மகாராஜ்கஞ்ச் மற்றும் குஷிநகர் மாவட்டங்கள் ஊடாகப் பாயும் நதிகளில் மிதந்த நிலையிலேயே குறித்த சடலங்கள் மீட்கப்பட்டதாக இந்திய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

நேபாளத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கின் போது அடித்துச் செல்லப்பட்டவர்களின் சடலங்களாக இவை இருக்கலாம் என மகாராஜ்கஞ்ச் மாவட்ட ஆட்சியர் கெளரவ் சிங் சோகர்வால் தெரிவித்துள்ளார்.

வியாழக்கிழமை மகாராஜ்கஞ்ச் மாவட்டத்தில் அடையாளம் காணப்படாத 4 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. இதேவேளை, மகாராஜ்கஞ்சிலிருந்து சுமார் 70 கிலோமீற்றர் தொலைவில் அமைந்துள்ள குஷிநகர் மாவட்டத்தில் மேலும் 3 சடலங்கள் மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மீட்கப்பட்ட சடலங்கள் யாருடையவை என்பதை உறுதிப்படுத்தும் நோக்கில் இந்திய அதிகாரிகள் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

நேபாளத்தில் ஏற்பட்டுள்ள இந்த பாரிய வெள்ளப் பேரழிவில் இதுவரை 584 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படும் நிலையில், நேபாளம் மற்றும் சீனாவின் திபெத் பிராந்தியம் முழுவதும் 2,400-க்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

எனினும், இந்திய நதிகளில் இருந்து மீட்கப்பட்டுள்ள 7 சடலங்களும் இதுவரை நேபாளத்தின் உத்தியோகபூர்வ உயிரிழப்பு எண்ணிக்கையில் சேர்க்கப்படவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.