நேபாளத்தில் ஏற்பட்டுள்ள கடும் வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 469 ஆக அதிகரித்துள்ளது. மேலும், 1,400-க்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ளதாக நேபாள பொலிஸார் தெரிவித்துள்ளனர். காணாமல் போனவர்களைத் தேடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ள நிலையில், நேபாள இர…

நேபாளத்தில் ஏற்பட்டுள்ள கடும் வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 469 ஆக அதிகரித்துள்ளது. மேலும், 1,400-க்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ளதாக நேபாள பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

காணாமல் போனவர்களைத் தேடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ள நிலையில், நேபாள இராணுவத்தினரும் மீட்புப் படையினரும் பாதிக்கப்பட்ட பகுதிகளில் களமிறக்கப்பட்டுள்ளனர். மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளுக்காக இராணுவ ஹெலிகாப்டர்களும் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

இமயமலைப் பகுதியில் பனிப்பாறை ஒன்று திடீரென உடைந்து சரிந்ததைத் தொடர்ந்து இந்தப் பாரிய வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. இதனால் பெருமளவில் பெருக்கெடுத்த வெள்ளநீருடன் சேறும் அடித்துச் செல்லப்பட்டதில் எல்லைப் பகுதிகளில் அமைந்திருந்த பல கிராமங்கள் மற்றும் பாலங்கள் கடுமையாக சேதமடைந்துள்ளன.

இந்த இயற்கை அனர்த்தத்தின் தாக்கம் திபெத் எல்லைப் பகுதிகளிலும் உணரப்பட்டுள்ளது. சீனப் பகுதியில் இதுவரை மூவர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன்படி, நேபாளம் மற்றும் சீனாவில் ஏற்பட்ட மொத்த உயிரிழப்பு 472 ஆக உயர்ந்துள்ளது.

இதனிடையே, திபெத்தில் சோசென் கோலா மற்றும் புரேபு சாங்போ ஆறுகள் சங்கமிக்கும் பகுதியில் புதிய தற்காலிகத் தடுப்பு ஏரி ஒன்று உருவாகியுள்ளது. இதில் சுமார் 30 இலட்சம் கனமீட்டர் நீர் தேங்கும் அபாயம் இருப்பதால், கீழ்நிலைப் பகுதிகளுக்கு சீன அதிகாரிகள் ‘Level-IV’ எச்சரிக்கையை விடுத்துள்ளனர்.

வெள்ளம் மற்றும் நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் காணாமல் போயுள்ள வெளிநாட்டவர்கள் மற்றும் யாத்ரீகர்களையும் தேடும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. மீட்புப் பணிகள் தொடர்ந்து தீவிரமாக நடைபெற்று வருவதுடன், பாதிக்கப்பட்ட மக்களுக்கு அவசர நிவாரண உதவிகளும் வழங்கப்பட்டு வருகின்றன.