நேபாளத்தில் ஏற்பட்ட வரலாறு காணாத பனிச்சரிவு மற்றும் திடீர் வெள்ளப் பேரிடரில் சிக்கி இதுவரை 682 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும், சுமார் 3,000 பேரின் நிலை என்னவென்று தெரியாமல் மாயமாகியுள்ளதால் உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்பட…

நேபாளத்தில் ஏற்பட்ட வரலாறு காணாத பனிச்சரிவு மற்றும் திடீர் வெள்ளப் பேரிடரில் சிக்கி இதுவரை 682 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகியுள்ளன.

மேலும், சுமார் 3,000 பேரின் நிலை என்னவென்று தெரியாமல் மாயமாகியுள்ளதால் உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.

பேரிடரின் பின்னணி: நேபாளம் - திபெத் எல்லைப் பகுதிக்கு அருகில் கடந்த 26 ஆம் திகதி ஏற்பட்ட பாரிய பனிச்சரிவு, போடேகோஷி நதியில் மிகப்பெரிய வெள்ளப்பெருக்கை ஏற்படுத்தியது.

மத்திய நேபாளத்தையே புரட்டிப்போட்ட இந்தப் பேரழிவில் நூற்றுக்கணக்கானோர் அடித்துச் செல்லப்பட்டனர்.

இடிபாடுகள் மற்றும் சேற்றுக்குவியல்களில் இருந்து மீட்கப்பட்ட உடல்களால் மருத்துவமனைப் பிணவறைகள் நிரம்பி வழிகின்றன. இடப்பற்றாக்குறை காரணமாகத் தற்காலிகப் பிணக்கிடங்குகள் அமைக்கப்பட்டு உடல்கள் சேமிக்கப்பட்டு வருகின்றன.

பாதிக்கப்பட்ட இந்தியர்கள் மற்றும் தமிழர்கள்: வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு மாயமானவர்களில் தமிழர்கள் உள்பட 167 இந்தியர்களும், 128 இந்திய வம்சாவளியினரும் அடங்குவர் என மத்திய வெளியுறவு அமைச்சகச் செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் தெரிவித்துள்ளார்.

நேபாளத்தில் சிக்கிய தமிழர்களை மீட்கும் பணியில் தமிழக அரசு தீவிரமாக ஈடுபட்டுள்ளது. முதல்வர் மு.க. ஸ்டாலின் உத்தரவின் பேரில் அமைச்சர்கள் டெல்லியில் முகாமிட்டு மத்திய அரசுடன் இணைந்து மீட்புப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். இதுவரை பல தமிழர்கள் மீட்கப்பட்டுச் சென்னை திரும்பியுள்ளனர் எனினும், மாயமான சிலரின் உறவினர்கள் சென்னையில் போராட்டத்தில் ஈடுபட்டதும் குறிப்பிடத்தக்கது.

துரித மீட்புப் பணிகள் மற்றும் சர்வதேச உதவிகள்: வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஐந்தாவது நாளாக இன்றும் முழுவீச்சில் மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

நேபாள ராணுவ வீரர்கள் 5,000 பேர் உள்பட 11 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் மற்றும் இந்திய உள்ளிட்ட வெளிநாட்டு நிபுணர்கள் இரவு பகலாக மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். இதுவரை 4,451 பேர் மீட்கப்பட்டுள்ளனர்; இவர்களில் 113 இந்தியர்கள் உட்பட 163 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளும் அடங்குவர்.

கல்வி மற்றும் மனிதாபிமானச் சீரழிவு:

குழந்தைகள் மற்றும் கல்வி: ஆயிரக்கணக்கான குழந்தைகளுக்கு அவசர உதவி தேவைப்படுவதாக யுனிசெப் (UNICEF) எச்சரித்துள்ளது. இந்தப் பேரிடரால் 18 பள்ளிகள் முழுமையாக அழிக்கப்பட்டதுடன், 20 பள்ளிகள் சேதமடைந்துள்ளன. பாதிக்கப்பட்ட மக்கள்: சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் (ICRC)மதிப்பீட்டின்படி குறைந்தபட்சம் 93,000 பேர் இந்த வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். அரசின் வேண்டுகோள்: கனரக ட்ரோன்கள், டிஎன்ஏ பரிசோதனை கருவிகள் மற்றும் உடல்களை உறையவைக்கும் சேமிப்பு அலகுகள் போன்ற சிறப்பு மீட்பு உதவிகளை வழங்குமாறு நேபாள அரசு கோரிக்கை விடுத்துள்ளது. நாட்டின் புனரமைப்புச் செலவு பல பில்லியன் டாலர்களை எட்டக்கூடும் என அந்நாட்டின் வெளியுறவு அமைச்சர் ஷிசிர் கானல் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே, கோஷி ஆற்றில் மீண்டும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் நுவாகோட், ரசுவா மற்றும் தாடிங் உள்ளிட்ட மாவட்டங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.