வட மாகாணத்தில் நெற் கிண்ணம் என அழைக்கப்படும் மன்னார் மாவட்டத்தில் இதுவரை நெல் சந்தைப்படுத்தல்சபை நெல் கொள்வனவில் ஈடுபடவில்லை என பாதிக்கப்பட்ட விவசாயிகள் தெரிவித்துள்ளனர். வட மாகாணத்தில் கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா போன்ற பகுதிகளில் நெல் கொள்வனவில் ஈடுபடுகின்ற போதும் மன்னார்…

வட மாகாணத்தில் நெற் கிண்ணம் என அழைக்கப்படும் மன்னார் மாவட்டத்தில் இதுவரை நெல் சந்தைப்படுத்தல்சபை நெல் கொள்வனவில் ஈடுபடவில்லை என பாதிக்கப்பட்ட விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

வட மாகாணத்தில் கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா போன்ற பகுதிகளில் நெல் கொள்வனவில் ஈடுபடுகின்ற போதும் மன்னார் மாவட்டத்தில் இன்னும் நெல் கொள்வனவு நடைபெறவில்லை.

ஏனைய மாவட்டங்களில் 15 தொடக்கம் 20 இடங்களில் நெல் கொள்வனவு நடைபெறுகின்றன.நெல் கொள்வனவு  மன்னார் மாவட்டத்தில் கடந்த கால போகத்தில் மூன்று இடங்களில் மாத்திரமே நெல் கொள்வனவு நடைபெற்றது.

அதிகமான நெல் உற்பத்தி உள்ள மன்னார் மாவட்டத்தில் நெல் சந்தைப்படுத்தல் சபை இவ்வாறான அநீதியான செயலில் ஈடுபடுவதாக விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர்.

குறிப்பாக மடு பிரதேச செயலாளர் பிரிவு இலுப்பைக் கடவை பிரதேசம் போன்ற இடங்களில் நெல் கொள்வனவு நடைபெறுவதில்லை.

கடந்த கால போக நெல்லை விவசாயிகள் இன்னும் விற்பனை செய்யாமல் வைத்திருக்கின்றனர். மாவட்டத்தில் சிறுபோக அறுவடையும் பல பகுதிகளில் நடை பெறுகின்ற போதும் நெல் சந்தைப்படுத்தல் பிரிவு நெல்லை கொள்வனவு செய்யாததால் குறைந்த விலையில் தனியார் வியாபாரிகளிடம் விவசாயிகள் நெல்லை வழங்க வேண்டிய துர்ப்பாக்கிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.குற்றச்சாட்டு

உரிய அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாவட்ட செயலாளர் இந்த விடயத்தில் எது விதமான அக்கறையுமின்றி செயலாற்றுகின்றனர் என பாதிக்கப்பட்ட விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர்.

ஆகவே உடனடியாக நடவடிக்கை எடுத்து மாவட்டத்திலுள்ள அனைத்து பகுதிகளிலும் நெல் கொள்வனவு செய்வதற்கு நெல் சந்தைப்படுத்தல் சபை முன் வரவேண்டும் என அவர்கள் வேண்டுகோள் விடுகின்றனர்.