நிலத்தடி நீர்வளத்தைப் பாதுகாக்கும் நோக்கில் பல மில்லியன் ரூபா செலவில் முன்னெடுக்கப்படும் அபிவிருத்தித் திட்டங்களை பாதிக்கும் வகையிலான கருத்துக்களையும், கோரிக்கைகளையும் ஏற்றுக் கொள்ள முடியாதது என வட மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் இன்று (13.08.2026) நட…

நிலத்தடி நீர்வளத்தைப் பாதுகாக்கும் நோக்கில் பல மில்லியன் ரூபா செலவில் முன்னெடுக்கப்படும் அபிவிருத்தித் திட்டங்களை பாதிக்கும் வகையிலான கருத்துக்களையும், கோரிக்கைகளையும் ஏற்றுக் கொள்ள முடியாதது என வட மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் இன்று (13.08.2026) நடைபெற்ற நீர் முகாமைத்துவத்தை மேம்படுத்தும் திட்டத்தின் இறுதிச் செயலமர்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.நிலத்தடி நீர்வளத் திட்டம்

தொடர்ந்து உரையாற்றிய ஆளுநர், யாழ்ப்பாண குடாநாட்டின் குடிநீர், விவசாயம், மக்களின் வாழ்வாதாரம் மற்றும் எதிர்கால அபிவிருத்தி ஆகிய அனைத்தும் நிலத்தடி நீர்வளத்துடன் பிரிக்க முடியாத வகையில் பின்னிப்பிணைந்துள்ளது. எனவே நிலத்தடி நீரைப் பாதுகாப்பது ஒரு சுற்றுச்சூழல் நடவடிக்கை மட்டுமல்ல, மக்களின் வாழ்வுரிமையை பாதுகாக்கும் தேசிய பொறுப்புமாகும். இந்தத் திட்டத்தின் ஊடாக நிலத்தடி நீர் கண்காணிப்பு நிலையங்கள் நிறுவப்பட்டுள்ளதுடன், நிலத்தடி நீரின் அளவு மற்றும் தரம் தொடர்பான தகவல்களை தொடர்ச்சியாக பதிவு செய்யும் நவீன கண்காணிப்பு முறைமை உருவாக்கப்பட்டுள்ளமை, மழைநீர் சேகரிப்பு, நிலத்தடி நீர் மீள்நிரப்பு நடவடிக்கைகள், பாடசாலை மாணவர்களை உள்ளடக்கிய விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல்வேறு பெறுபேறுகள் உருவாக்கப்பட்டுள்ளமை பாராட்டத்தக்கது.

பல மில்லியன் ரூபா செலவில் உருவாக்கப்பட்டுள்ள தொண்டமனாறு நீரேரித் தடுப்பணைத் திட்டத்தின் பயன்கள் தற்போது வெளிப்படத் தொடங்கியுள்ள நிலையில், குறுகியகால அழுத்தங்களின் அடிப்படையில் அவற்றின் நோக்கத்தை பாதிக்கும் தீர்வுகளை முன்வைப்பது பொருத்தமற்றது.நீர்வளப் பாதுகாப்பு

எதிர்கால தீர்மானங்கள் அனைத்தும் அறிவியல் தரவுகள் மற்றும் ஆய்வுகளின் அடிப்படையிலேயே மேற்கொள்ளப்பட வேண்டும்.

நிலத்தடி நீர்வளப் பாதுகாப்பு என்பது ஒரு தனி நிறுவனத்தின் பொறுப்பு அல்ல. மாறாக திணைக்களங்கள், ஆய்வு நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள், உள்ளூராட்சி மன்றங்கள், விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் ஒருங்கிணைந்து செயற்பட்டால்தான் நிலையான தீர்வுகளை உருவாக்க முடியும்.

வெளிநாட்டு நிதியுதவித் திட்டங்கள் நிறைவடைந்த பின்னரும் இவ்வாறான செயற்பாடுகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட வேண்டும்.

இந்த நிகழ்வில் சர்வதேச நீர் முகாமைத்துவ நிறுவனத்தின் இலங்கைக்கான பிரதிநிதிகள், பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயத்தின் பிரதிநிதி, வட மாகாண விவசாய அமைச்சின் செயலாளர், விவசாயத் திணைக்களத்தின் மாகாணப் பணிப்பாளர், தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை அதிகாரிகள், யாழ்ப்பாண பல்கலைக்கழக கல்வியாளர்கள், அதிகாரிகள், மாணவர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டுள்ளனர்.