மஸ்கெலியா பிரதேச வைத்தியசாலையில் நிலவும் குறைபாடுகளை நேரில் சென்று பார்வையிட்ட இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமான், நோயாளர்களுக்கு தடையற்றதும் தரமானதுமான சுகாதார சேவையை வழங்குவதற்குத் தேவையான வசதிகளை விரைவில் பெற்றுக்கொடுக்க ந…

மஸ்கெலியா பிரதேச வைத்தியசாலையில் நிலவும் குறைபாடுகளை நேரில் சென்று பார்வையிட்ட இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமான், நோயாளர்களுக்கு தடையற்றதும் தரமானதுமான சுகாதார சேவையை வழங்குவதற்குத் தேவையான வசதிகளை விரைவில் பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார். மஸ்கெலியா பிரதேச வைத்தியசாலைக்கு நேற்றைய தினம் (12.08.2026) கண்காணிப்பு விஜயமொன்றை மேற்கொண்ட ஜீவன் தொண்டமான், வைத்தியசாலையின் தற்போதைய நிலைமை, அங்கு காணப்படும் அடிப்படை வசதிகளின் குறைபாடுகள் மற்றும் நோயாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.

இதன்போது, வைத்தியசாலையின் முன்னாள் மாவட்ட வைத்திய அதிகாரியான வைத்தியர் யு.சு.யு. ரிஷான் உள்ளிட்ட வைத்தியசாலை அதிகாரிகளுடன் அவர் விரிவான கலந்துரையாடலில் ஈடுபட்டார்.மஸ்கெலியா வைத்தியசாலையின் செயற்பாடு மஸ்கெலியா பிரதேச வைத்தியசாலையின் சீரான செயற்பாட்டிற்கு மொத்தமாக 27 ஊழியர்கள் தேவைப்படும் நிலையில், தற்போது 14 ஊழியர்கள் மாத்திரமே கடமையில் இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதனால் 13 ஊழியர்களின் பற்றாக்குறை காணப்படுவதுடன், இந்த நிலைமை வைத்தியசாலையின் அன்றாட சேவைகளிலும் நோயாளர்களுக்கான சிகிச்சை நடவடிக்கைகளிலும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடியதாக உள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டது. நோயாளர்களுக்கு தடையின்றி மருத்துவ சேவைகளை வழங்குவதற்கு இந்த ஊழியர் பற்றாக்குறையை உடனடியாக நிவர்த்தி செய்ய வேண்டியதன் அவசியத்தை ஜீவன் தொண்டமான் வலியுறுத்தினார்.

நான்கு மாடிகளைக் கொண்ட மஸ்கெலியா வைத்தியசாலையில் பொருத்தப்பட்டுள்ள இரண்டு மின்தூக்கிகளும் கடந்த ஒன்றரை வருடங்களாக இயங்காத நிலையில் இருப்பதும் இந்த விஜயத்தின்போது தெரியவந்தது.

இதனால் வயோதிபர்கள், நோயாளர்கள் மற்றும் சிகிச்சைக்காக வைத்தியசாலைக்கு வரும் பொதுமக்களை ஒரு மாடியிலிருந்து மற்றொரு மாடிக்கு மாற்றுவதில் பாரிய சிரமங்கள் ஏற்படுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

குறைந்த மின் அழுத்தமே மின்தூக்கிகள் இயங்காததற்கான முக்கிய காரணமாக தெரிவிக்கப்பட்ட நிலையில், மின்சார இணைப்பை சீரமைத்து இரண்டு மின்தூக்கிகளையும் விரைவில் இயங்கச் செய்வதற்கான நடைமுறைத் தீர்வை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என ஜீவன் தொண்டமான் தெரிவித்தார்.

70 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்களுக்கு சேவை வழங்கும் வைத்தியசாலையாக மஸ்கெலியா பிரதேச வைத்தியசாலை காணப்படுகின்ற போதிலும், முறையான வைத்திய ஆய்வுக்கூட வசதி இல்லாதிருப்பது பாரிய குறைபாடாக சுட்டிக்காட்டப்பட்டது.

இரத்த மாதிரிகள் உள்ளிட்ட பல்வேறு மருத்துவப் பரிசோதனைகளுக்காக மாதிரிகளை டிக்கோயா - கிளங்கன் வைத்தியசாலைக்கு அனுப்ப வேண்டிய நிலை காணப்படுகின்றது.நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய நிலை அங்கிருந்து பரிசோதனை முடிவுகள் கிடைக்கும் வரை நோயாளர்கள் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்படுவதால், சிகிச்சை வழங்குவதிலும் தாமதம் ஏற்படுவதாக தெரிவிக்கப்பட்டது.

எனவே, மஸ்கெலியா வைத்தியசாலையிலேயே தேவையான அடிப்படை ஆய்வுக்கூட வசதிகளை ஏற்படுத்துவது தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என ஜீவன் தொண்டமான் வலியுறுத்தினார்.

இதனுடன், வைத்தியசாலையில் காணப்படும் நோயாளர் காவுவண்டி அடிக்கடி பழுதடைவதால், அவசர சிகிச்சை தேவைப்படும் நோயாளர்களை மேலதிக சிகிச்சைக்காக ஏனைய வைத்தியசாலைகளுக்கு மாற்றுவதில் காலதாமதம் ஏற்படுவதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

நோயாளர்களின் உயிர் பாதுகாப்புடன் தொடர்புடைய விடயம் என்பதால், நோயாளர் காவுவண்டியை முறையாக பராமரிப்பதுடன், அவசர தேவைகளின் போது பயன்படுத்தக்கூடிய மாற்று ஏற்பாடுகளையும் மேற்கொள்ள வேண்டியது அவசியம் என நாடாளுமன்ற உறுப்பினர் ஜீவன் தொண்டமான் சுட்டிக்காட்டினார். வைத்தியசாலையில் நேரில் கண்டறியப்பட்ட குறைபாடுகள் தொடர்பில் நுவரெலியா மாவட்ட செயலாளருக்கு உடனடியாக தொலைபேசி ஊடாகத் தெரியப்படுத்தியுள்ளதாக ஜீவன் தொண்டமான் தெரிவித்தார்.

மேலும், குறித்த பிரச்சினைகளுக்கு விரைவான தீர்வுகளை பெற்றுக்கொடுக்கும் நோக்கில் மாவட்ட செயலாளரை இன்றைய தினம் (13.08.2026)  நேரடியாக சந்தித்து கலந்துரையாடவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.