தமக்கு வழங்கப்பட்டுள்ள நிறைவேற்று அதிகாரம் உள்ளிட்ட எந்த அதிகாரத்தையும் அரசியலமைப்பிற்கு அப்பாற்பட்டு பயன்படுத்தப் போவதில்லை என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் பிரதிநிதிகளுடன் நேற்று (12) பிற்பகல் நடைபெற்ற சந்திப்பின்போதே ஜனாதிபதி…
தமக்கு வழங்கப்பட்டுள்ள நிறைவேற்று அதிகாரம் உள்ளிட்ட எந்த அதிகாரத்தையும் அரசியலமைப்பிற்கு அப்பாற்பட்டு பயன்படுத்தப் போவதில்லை என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் பிரதிநிதிகளுடன் நேற்று (12) பிற்பகல் நடைபெற்ற சந்திப்பின்போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்துள்ளார்.
அரசியலமைப்பின் வரம்புகளுக்கு உட்பட்டே தமது நிறைவேற்று அதிகாரத்தையும் அரசாங்கத்திடம் உள்ள ஏனைய அதிகாரங்களையும் பயன்படுத்துவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
தற்போதைய அரசியலமைப்பு மாற்றங்கள் மற்றும் அதனால் எதிர்காலத்தில் தமக்கும் பதவியை விட்டு விலக வேண்டிய நிலை ஏற்படலாம் என முன்வைக்கப்பட்ட சவால் தொடர்பிலும் ஜனாதிபதி இதன்போது கருத்து தெரிவித்துள்ளார்.
தாம் பதவியில் தொடர்ந்து இருக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் அரசியலுக்கு வரவில்லை எனக் குறிப்பிட்ட ஜனாதிபதி, நாட்டில் மாற்றத்தை ஏற்படுத்துவதற்காக சவால்களை எதிர்கொள்ளத் தயாராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதை உதாரணமாகக் குறிப்பிட்ட அவர், தனது பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படக்கூடிய சூழ்நிலையிலும் விசாரணைகளை முன்னெடுத்துச் செல்லத் தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளார்.
எந்தவொரு மாற்றத்தையும் சவால்களை எதிர்கொள்ளாமல் ஏற்படுத்த முடியாது எனக் குறிப்பிட்ட ஜனாதிபதி, அந்தச் சவால்களின் காரணமாக தமது பதவி பறிபோகும் நிலை ஏற்பட்டாலும் அதனை ஏற்றுக்கொண்டு பதவியிலிருந்து விலகத் தயாராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.












