இலங்கையில் இடம்பெற்ற குற்றச்செயல்களுடன் தொடர்புடையவர்கள் என சந்தேகிக்கப்படும், வெளிநாடுகளில் தலைமறைவாக உள்ள 93 சந்தேக நபர்களைக் கைது செய்து நாட்டுக்கு அழைத்து வருவதற்காக இன்டர்போல் ஊடாக சிவப்பு அறிவித்தல்கள் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். ‘முழு நாடும் ஒன்றாக’…
இலங்கையில் இடம்பெற்ற குற்றச்செயல்களுடன் தொடர்புடையவர்கள் என சந்தேகிக்கப்படும், வெளிநாடுகளில் தலைமறைவாக உள்ள 93 சந்தேக நபர்களைக் கைது செய்து நாட்டுக்கு அழைத்து வருவதற்காக இன்டர்போல் ஊடாக சிவப்பு அறிவித்தல்கள் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
‘முழு நாடும் ஒன்றாக’ எனும் தேசிய நடவடிக்கையின் முன்னேற்றம் தொடர்பில் விளக்கமளிப்பதற்காக இன்று (13) நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் உதவிப் பொலிஸ் அத்தியட்சகருமான எஃப்.யு. வூட்லர் இதனைத் தெரிவித்துள்ளார்.
2024 மற்றும் 2025ஆம் ஆண்டுகளிலும், 2026ஆம் ஆண்டின் இதுவரையான காலப்பகுதியிலும் இன்டர்போல் சிவப்பு அறிவித்தல்கள் ஊடாக 38 சந்தேக நபர்கள் இலங்கைக்கு அழைத்து வரப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், பொலிஸ்மா அதிபரின் நேரடி தலையீட்டின் மூலம் மேலும் 35 முக்கிய குற்றச்செயல் சந்தேக நபர்கள் நாட்டுக்கு அழைத்து வரப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, வெளிநாடுகளில் இருந்து நாட்டுக்கு அழைத்து வரப்பட்ட சந்தேக நபர்கள் சட்டவிரோதமாக சம்பாதித்ததாகக் கூறப்படும் சொத்துக்களை அடையாளம் கண்டு அரசின் பொறுப்புக்குள் கொண்டு வருவதற்கான விசேட வேலைத்திட்டமும் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
இதன்படி, வாகனங்கள், வீடுகள், தங்கம் மற்றும் காணிகள் உள்ளிட்ட சொத்துக்களை முடக்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
2024ஆம் ஆண்டில் சுமார் 1.49 பில்லியன் ரூபா பெறுமதியான சொத்துக்களும், 2025ஆம் ஆண்டில் சுமார் 1.549 பில்லியன் ரூபா பெறுமதியான சொத்துக்களும் முடக்குவதற்கான ஆரம்பகட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
மேலும், 2026 ஜனவரி 1ஆம் திகதி முதல் இதுவரை சட்டவிரோதமாக சம்பாதிக்கப்பட்டதாகக் கூறப்படும் 839 மில்லியன் ரூபா பெறுமதியான சொத்துக்களை அரசின் பொறுப்புக்குள் கொண்டு வருவதற்கான ஆரம்பகட்ட சட்ட நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.












