எஸ். சதீஸ் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் முன்னாள் தலைவரும் அமைச்சருமான அமரர் ஆறுமுகம் தொண்டமானின் உருவப்படம் கடந்த ஆட்சிக்காலத்தில் பிரதேச சபையில் காட்சிப்படுத்தப்பட்டிருந்ததைச் சுட்டிக்காட்டி, "நோர்வூட் பிரதேச சபை தேசிய மக்கள் சக்தியின் சபை எனக் குறிப்பிடுவது பாரிய குற்றமல்ல" என…

எஸ். சதீஸ்

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் முன்னாள் தலைவரும் அமைச்சருமான அமரர் ஆறுமுகம் தொண்டமானின் உருவப்படம் கடந்த ஆட்சிக்காலத்தில் பிரதேச சபையில் காட்சிப்படுத்தப்பட்டிருந்ததைச் சுட்டிக்காட்டி, "நோர்வூட் பிரதேச சபை தேசிய மக்கள் சக்தியின் சபை எனக் குறிப்பிடுவது பாரிய குற்றமல்ல" என ஐக்கிய தேசிய கட்சியின் நோர்வூட் பிரதேச சபை உறுப்பினர் ஜனனி ஜானகி கருத்துத் தெரிவித்தார்.

இக் கருத்து காரணமாக,   வியாழக்கிழமை (13) அன்று நடைபெற்ற சபை மாதாந்த அமர்வின் போது பெரும் அமைதியின்மை ஏற்பட்டது.

கடந்த நோர்வூட் மாதாந்த சபை அமர்வின் போது, பிரதேச சபையின் தவிசாளர் நோர்வூட் பிரதேச சபை "தேசிய மக்கள் சக்தியின் சபை" என அடிக்கடி கூறியதாகவும், அதற்குத் தவிசாளர் மன்னிப்புக் கோர வேண்டுமென்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வாதப்பிரதிவாதங்களை முன்வைத்தபோதே அங்கு இந்த அமைதியின்மை உருவாகியது.

இதேவேளை, கடந்த மாதம் நடைபெற்ற சபை அமர்வின் போது, தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர் பந்துசேன, சபையின் தவிசாளர் தமது வாகனத்திற்குப் பாவிக்கும் எரிபொருளின் மதிப்பீடு தொடர்பான பிரேரணையை முன்வைக்க அனுமதி கோரியிருந்த போதிலும், அதற்கான அனுமதியைத் தவிசாளர் வழங்கவில்லை.

"ஆகையினால்தான் கடந்த முறை சபையின் அறிக்கை பிழையென நான் கூறுகிறேன்" என அவர் மேலும் தெரிவித்தார். இதனிடையே, இன்றைய தினமும் சபை அமர்வு நடைபெற்றுக் கொண்டிருந்தவேளை, ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சபையிலிருந்து வெளிநடப்புச் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.