பாராளுமன்றத்தின் டிஜிட்டல் அமைப்புகளுக்குள் அனுமதியின்றி ஊடுருவி, உணர்திறன் மிக்கத் தகவல்களைத் திருடும் அபாயம் காணப்படுவதால், அது குறித்துச் சிறப்புக்கவனம் செலுத்தப்பட வேண்டும் எனச் இலங்கை கணினி அவசரப் பதிலளிப்புக் குழு (Sri Lanka CERT) பாராளுமன்றப் பிரதானிகளுக்கு அறிவித்துள்ளதா…

பாராளுமன்றத்தின் டிஜிட்டல் அமைப்புகளுக்குள் அனுமதியின்றி ஊடுருவி, உணர்திறன் மிக்கத் தகவல்களைத் திருடும் அபாயம் காணப்படுவதால், அது குறித்துச் சிறப்புக்கவனம் செலுத்தப்பட வேண்டும் எனச் இலங்கை கணினி அவசரப் பதிலளிப்புக் குழு (Sri Lanka CERT) பாராளுமன்றப் பிரதானிகளுக்கு அறிவித்துள்ளதாகத் தேசிய தணிக்கை அலுவலகத்தின் புதிய அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இது தவிர, பாராளுமன்றத்தின் டிஜிட்டல் அமைப்புகளுக்குள் அனுமதியின்றி ஊடுருவி, நிறுவனத்தின் செயல்பாடுகளுக்கு இடையூறு விளைவித்தல்; இணையதளங்களின் உள்ளடக்கங்களைச் சிதைத்து நிறுவனத்தின் நற்பெயருக்குக் களங்கம் ஏற்படுத்துதல் போன்ற தீங்கிழைக்கும் செயல்கள் இடம்பெறுவதற்கான அபாயமும் உள்ளதாக அக்குழு மேலும் சுட்டிக்காட்டியுள்ளதாகத் தேசிய தணிக்கை அலுவலகம் தெரிவித்துள்ளது.

இலங்கை கணினி அவசரப் பதிலளிப்புக் குழு, கடந்த ஆண்டில் பாராளுமன்றத்தின் தகவல் மற்றும் சைப்ரப் பாதுகாப்புத் தொடர்பாகச் சிறப்பு மதிப்பீடு ஒன்றை நடத்தியுள்ளது. அதில் பரிசீலிக்கப்பட்ட 56 விடயங்களில் 46 விடயங்களின் அபாய அளவு மிகவும் அதிக மட்டத்தில் உள்ளதாக அதில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளதாக அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை கணினி அவசரப் பதிலளிப்புக் குழு (Sri Lanka CERT) என்பது இலங்கையின் சைப்ரப் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக நிறுவப்பட்ட முதன்மை தேசிய மையமாகும்; இது சைப்ரப் அச்சுறுத்தல்களைக் கட்டுப்படுத்துதல், அவசரக் கணினி மற்றும் பிணையப் (நெட்வொர்க்) பாதுகாப்புப் பிரச்சினைகளைத் தீர்த்தல், பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துதல் போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றது.

இலங்கை பாராளுமன்றத்தின் 2025ஆம் ஆண்டிற்கான வருடாந்தச் செயல்திறன் அறிக்கையில் சேர்க்கப்பட்டுள்ள தணிக்கை அறிக்கையிலேயே இத்தகவல்கள் இடம்பெற்றுள்ளன.

‘நிர்வாகக் குறைபாடுகள்’ எனும் தலைப்பின் கீழ் இதைப் பற்றிய தகவல்கள் அதில் அறிக்கையிடப்பட்டுள்ளன.

இது தொடர்பாக பாராளுமன்றத்தின் உயர் அதிகாரி ஒருவரிடம் வினவியபோது, “இவ்வாறான அபாயங்களைத் தடுப்பதற்குப் பல்வேறு நடவடிக்கைகள் ஏற்கனவே எடுக்கப்பட்டுள்ளன” என்று அவர் தெரிவித்தார்.