யாழ்ப்பாணம் - சுழிபுரம் விக்டோரியா கல்லூரியில் இடம்பெற்றதாகக் கூறப்படும் மோசடிகள் தொடர்பில், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் பெறப்பட்ட ஆதாரங்கள் ஒன்றுக்கொன்று முரணாக இருப்பதாக, கல்லூரியின் பழைய மாணவர் சதாசிவம் குற்றம் சாட்டியுள்ளார். இது தொடர்பாக இன்று (30.07.2026) ஏற்பாட…
யாழ்ப்பாணம் - சுழிபுரம் விக்டோரியா கல்லூரியில் இடம்பெற்றதாகக் கூறப்படும் மோசடிகள் தொடர்பில், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் பெறப்பட்ட ஆதாரங்கள் ஒன்றுக்கொன்று முரணாக இருப்பதாக, கல்லூரியின் பழைய மாணவர் சதாசிவம் குற்றம் சாட்டியுள்ளார்.
இது தொடர்பாக இன்று (30.07.2026) ஏற்பாடு செய்யப்பட்ட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
விசாரணையில் வெளியான மோசடிகள் அவர் மேலும் தெரிவிக்கையில்,
பாடசாலையில் காணப்பட்ட பழமையான மதிலை இடிப்பதற்கு பழைய மாணவர்கள் விரும்பாத நிலையில், சிலரின் தூண்டுதலின் பேரில் குறித்த மதில் இடிக்கப்பட்டு புதிய மதில் அமைக்கப்பட்டுள்ளது.
குறித்த மதிலை அமைப்பதற்காக பெறப்பட்ட அனுமதிகள் ஒன்றுக்கொன்று முரணாகவும், முறைகேடான வகையிலும் பெறப்பட்டுள்ளதாகக் கண்டறியப்பட்டுள்ளது.
இதன்படி, வலிகாமம் கல்வி வலயத்தினால் இரண்டு கடிதத் தலைப்புகளில் கடிதங்கள் பரிமாறப்பட்டுள்ளதுடன், அவற்றில் ஒன்றில் திகதி குறிப்பிடப்படாமல் உயர் அதிகாரியின் கையொப்பம் இடப்பட்டுள்ளது.
அத்துடன், குறித்த மதிலை மீளப் புனரமைப்பதற்கு மாத்திரமே வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளரால் அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில், யாருடைய தூண்டுதலின் பேரில் மதில் முழுமையாக இடிக்கப்பட்டது என்ற கேள்வி எழுகின்றது.
மேலும், தற்போது இடம்பெற்ற 150ஆவது ஆண்டு விழாவுக்கான நிதி, பாடசாலையில் அங்கீகரிக்கப்பட்ட நடைமுறைகளைப் பின்பற்றாமல் தனியார் கணக்குகளில் பெறப்பட்டமை தொடர்பிலும் பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளோம்.
போதிய அனுமதிகள் இன்றி கட்டப்பட்ட மதில் எமது முறைப்பாடுகள் வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளர், மாகாண கல்வித் திணைக்களம் மற்றும் வடமாகாண ஆளுநர் ஆகியோருக்கு தெரியப்படுத்தப்பட்டுள்ள போதிலும், இதுவரை முறையான விசாரணைகள் எதுவும் இடம்பெறவில்லை.
குறித்த மதிலை கட்டுவதற்கு பிரதேச சபையின் அனுமதி பெறப்படுவதற்கு முன்னரே, தவிசாளர் பாடசாலை நிர்வாகத்திற்கு மதில் கட்டுவதற்கான அனுமதியை வழங்கியதற்கான ஆதாரங்கள் கிடைக்கப்பெற்றுள்ளன. ஆகவே, குறித்த பாடசாலையின் பழமையைப் பேணுவதுடன், புதிய விடயங்களை மேற்கொள்ளும்போது உரிய அனுமதிகளைப் பெற்றுக்கொள்ள வேண்டும். உரிய அனுமதிகள் இன்றி தன்னிச்சையாக மேற்கொள்ளப்படும் செயற்பாடுகளுக்கு எதிராக சம்பந்தப்பட்ட தரப்பினர் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
இவர்கள் மீது வெறுமனே நடவடிக்கை எடுப்பது மாத்திரம் போதாது. மாறாக, இதுபோன்ற தவறுகள் இனிமேல் இடம்பெறாத வகையில் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். இல்லையெனில், நீதிமன்றத்தை நாட வேண்டிய துர்ப்பாக்கிய நிலைக்கு நாம் தள்ளப்படுவோம் என்றார்.












