அனுராதபுர அட்டமஸ்தானத்தின் முன்னாள் அதிபதியான பல்லேகம ஹேமரதன தேரருக்கு எதிராக சிறுமி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாக தொடரப்பட்டுள்ள வழக்கில், விஹாரையில் இருந்து கைப்பற்றப்பட்ட கால் துடைப்பானில் கண்டெடுக்கப்பட்ட விந்து மாதிரிகள் தேரரின் DNA-வுடன் ஒத்துப்போவதாக அர…

அனுராதபுர அட்டமஸ்தானத்தின் முன்னாள் அதிபதியான பல்லேகம ஹேமரதன தேரருக்கு எதிராக சிறுமி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாக தொடரப்பட்டுள்ள வழக்கில், விஹாரையில் இருந்து கைப்பற்றப்பட்ட கால் துடைப்பானில் கண்டெடுக்கப்பட்ட விந்து மாதிரிகள் தேரரின் DNA-வுடன் ஒத்துப்போவதாக அரச இரசாயன பகுப்பாய்வு அறிக்கையில் தெரியவந்துள்ளது.

எனினும், குறித்த கால் துடைப்பான் மற்றும் முன்னர் கைப்பற்றப்பட்ட ஆடைகளில் பாதிக்கப்பட்ட சிறுமியின் DNA அடையாளங்கள் எதுவும் கண்டறியப்படவில்லை என பொலிஸார் அனுராதபுர பிரதான நீதவான் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.

குறித்த அறிக்கைகள் சட்டமா அதிபர் திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. மேலும், சம்பவம் தொடர்பான காணொளிச் சான்றுகளும் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.

இதனிடையே, சந்தேகநபரான தேரர் நீதிபதிகளுக்கான சிறப்பு வாயில் ஊடாக நீதிமன்றத்திற்குள் அழைத்துச் செல்லப்பட்டமைக்கு பாதிக்கப்பட்ட தரப்பு சட்டத்தரணி எதிர்ப்பு தெரிவித்தார். இதுதொடர்பில் விசாரணை நடத்துமாறு நீதவான் சியபத் சசிது விக்கிரமரத்ன நீதிமன்றப் பாதுகாப்புப் பிரிவுக்கு உத்தரவிட்டார்.

மேலும், சிறுமியின் தாயார் பயன்படுத்தியதாகக் கூறப்படும் மேலதிக தொலைபேசி இலக்கங்கள் தொடர்பில் விசாரணை நடத்தவும், சிறுமியை மனநல மருத்துவரிடம் முன்னிலைப்படுத்தவும் நீதிமன்றம் உத்தரவிட்டது.

1995ஆம் ஆண்டின் 22ஆம் இலக்க தண்டனைச் சட்டத் திருத்தத்தின் கீழ் பாலியல் துஷ்பிரயோகம் மற்றும் பாலியல் வல்லுறவு குற்றச்சாட்டுகள் தேரருக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ளன. அவருக்கு உடந்தையாக இருந்ததாகக் கூறி சிறுமியின் தாயாருக்கு எதிராகவும் மனிதக் கடத்தல் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

கடுமையான பிணை நிபந்தனைகள் மற்றும் வெளிநாட்டுப் பயணத் தடையின் கீழ் உள்ள தேரர் சார்பில் 20க்கும் மேற்பட்ட சட்டத்தரணிகள் நீதிமன்றத்தில் ஆஜராகினர்.

சட்டமா அதிபரின் மேலதிக ஆலோசனைகளைப் பெறுவதற்காக வழக்கு 2027 ஜனவரி 8ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.