வெளிநாட்டு வேலைவாய்ப்புடன் தொடர்புடைய குடும்பங்களின் பொருளாதார மற்றும் சமூக நிலைமைகளை மேம்படுத்தும் நோக்கில், ஒருங்கிணைந்த அணுகுமுறையை நடைமுறைப்படுத்துவது தொடர்பான செயலமர்வு யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு. மருதலிங்கம் பிரதீபன் அவர்களின் தலைமையில் நேற்று (21) யாழ்ப்பாணம் மா…

வெளிநாட்டு வேலைவாய்ப்புடன் தொடர்புடைய குடும்பங்களின் பொருளாதார மற்றும் சமூக நிலைமைகளை மேம்படுத்தும் நோக்கில், ஒருங்கிணைந்த அணுகுமுறையை நடைமுறைப்படுத்துவது தொடர்பான செயலமர்வு யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு. மருதலிங்கம் பிரதீபன் அவர்களின் தலைமையில் நேற்று (21) யாழ்ப்பாணம் மாவட்டச் செயலக செயலமர்வு மண்டபத்தில் நடைபெற்றது. வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சின் சிரேஷ்ட உதவி செயலாளர் திரு. க. நிகரில்காந்த் அவர்களின் பங்குபற்றலுடன் நடைபெற்ற இச் செயலமர்வில், வெளிநாட்டு வேலைவாய்ப்புடன் தொடர்புடைய குடும்பங்களின் நலன்களைப் பாதுகாத்தல், அவர்களின் பொருளாதார மற்றும் சமூக நிலைமைகளை மேம்படுத்தல், அத்துடன் எதிர்கொள்ளக்கூடிய பாதிப்புகளைக் குறைத்தல் தொடர்பில் கலந்துரையாடப்பட்டது. இச் செயலமர்வை ஆரம்பித்து உரையாற்றிய யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் அவர்கள், வெளிநாடுகளுக்குத் தொழில் வாய்ப்புக்காகச் செல்லும் பெண்களின் குடும்ப நலன்களைப் பாதுகாப்பதுடன், அவர்கள் எதிர்கொள்ளக்கூடிய சமூக, பொருளாதார மற்றும் குடும்ப ரீதியான பாதிப்புகளைக் குறைக்கும் நோக்கில் இத்திட்டம் ஐந்து ஆண்டு காலத் திட்டமாக முன்னெடுக்கப்படவுள்ளதாகத் தெரிவித்தார். மேலும், இத்திட்டம் முதன்முறையாக யாழ்ப்பாண மாவட்டத்தில் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாகவும் குறிப்பிட்டார். இத்திட்டத்தின் ஊடாக பொருளாதார வலுப்படுத்தல், சிறுவர் நலன் மற்றும் பாதுகாப்பு, பெண்கள் வலுவூட்டல், சமூக ஆதரவு மற்றும் திறன் மேம்பாடு உள்ளிட்ட துறைகளில் பணியாற்றும் உத்தியோகத்தர்களுக்கு தேவையான அறிவு மற்றும் திறன்களை வழங்குவதே இச் செயலமர்வின் பிரதான நோக்கமாகும் எனத் தெரிவித்த அரசாங்க அதிபர் அவர்கள், இத்திட்டத்தைச் சிறப்பாகவும் வினைத்திறனுடனும் நடைமுறைப்படுத்துவதற்காக உத்தியோகத்தர்களுக்கு பின்வரும் அறிவுறுத்தல்களை வழங்கினார். 1.வெளிநாடு செல்லும் குடும்பங்களின் பொருளாதார மற்றும் சமூக நிலைமைகளுடன், குறிப்பாக பெண்கள், சிறுவர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களின் தொழில்திறன் ஆகியவற்றையும் ஒருங்கிணைந்த முறையில் கவனத்தில் கொள்ள வேண்டும் எனத் தெரிவித்தார். 2.வெளிநாடு செல்வோர் போலியான தகவல்களை வழங்குவதையும், பிறரின் பெயர்களைப் பயன்படுத்துவதையும் தவிர்த்து, உரிய மற்றும் உண்மையான தகவல்களை வழங்குவதை உறுதிப்படுத்த வேண்டும் என அறிவுறுத்தினார். 3.பெண்கள் அபிவிருத்தி, சிறுதொழில், திறன் விருத்தி, விதாதா உள்ளிட்ட அனைத்துத் துறைசார் உத்தியோகத்தர்களும் ஒருங்கிணைந்து செயற்பட்டு, தேவையான சேவைகளை குடும்பங்களுக்கு வழங்க வேண்டும் என அறிவுறுத்தினார். 4.ஒவ்வொரு பிரதேச செயலகப் பிரிவும் தமது பிரிவில் முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகள் தொடர்பான மாதாந்த முன்னேற்ற அறிக்கைகளை மாவட்ட செயலகத்திற்கும் அமைச்சிற்கும் முறையாகச் சமர்ப்பிக்க வேண்டும். 5.திட்டத்தின் முன்னேற்றம் மூன்று மாதங்களுக்கு ஒருமுறை முறையாக மீளாய்வு செய்யப்பட்டு, தேவையான திருத்தங்களும் மேலதிக நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட வேண்டும் என அறிவுறுத்தினார். 6.உதவி மற்றும் வழிகாட்டல் தேவைப்படும் குடும்பங்களை அடையாளம் கண்டு, அவர்களின் வீடுகளுக்கே நேரடியாகச் சென்று ஆலோசனைகளையும் வழிகாட்டல்களையும் வழங்க வேண்டும் என அறிவுறுத்தினார். 7.குடும்பங்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு துறைசார் ஒருங்கிணைந்த அணுகுமுறையைப் பின்பற்றி, சம்பந்தப்பட்ட அனைத்து திணைக்களங்களும் இணைந்து தீர்வுகளை வழங்க வேண்டும் என கேட்டுக் கொண்டார் . மேலும், இத்திட்டத்தின் ஊடாக வெளிநாடு செல்லும் குடும்பங்களின் வாழ்க்கையில் நேர்மறையானதும் நிலையானதுமான மாற்றத்தை ஏற்படுத்தும் வகையில், அனைத்து உத்தியோகத்தர்களும் அர்ப்பணிப்புடனும் பொறுப்புணர்வுடனும் ஒருங்கிணைந்து செயற்பட வேண்டும் என அரசாங்க அதிபர் அவர்கள் வலியுறுத்தினார்.