காசாவிலிருந்து பட்டங்கள், ஆளில்லா விமானங்கள் (ட்ரோன்கள்) மற்றும் பலூன்கள் இஸ்ரேலை நோக்கி ஏவப்படுவது தொடர்ந்தால் காசாவில் தமது நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்துவதாக இஸ்ரேல் ஞாயிற்றுக்கிழமை எச்சரித்திருந்தது. இந்நிலையில், காசாவில் இத்தகைய பொருட்கள் ஏவப்படும் பகுதிகளிலிருந்து மக்களை வெ…
காசாவிலிருந்து பட்டங்கள், ஆளில்லா விமானங்கள் (ட்ரோன்கள்) மற்றும் பலூன்கள் இஸ்ரேலை நோக்கி ஏவப்படுவது தொடர்ந்தால் காசாவில் தமது நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்துவதாக இஸ்ரேல் ஞாயிற்றுக்கிழமை எச்சரித்திருந்தது.
இந்நிலையில், காசாவில் இத்தகைய பொருட்கள் ஏவப்படும் பகுதிகளிலிருந்து மக்களை வெளியேற்றுவதாக இஸ்ரேல் விடுத்துள்ள மிரட்டலை ஐக்கிய நாடுகள் சபை செவ்வாய்க்கிழமை கடுமையாகச் சாடியுள்ளதுடன், இஸ்ரேலியத் தலைவர்களிடமிருந்து வெளிவரும் "ஏற்றுக்கொள்ள முடியாத பேச்சுக்களை" வருத்தத்துடன் பதிவு செய்துள்ளது.
"குழந்தைகள் பட்டம் பறக்கவிடுவதைக் காரணம் காட்டி மக்களை வெளியேற்றுவதாக விடுக்கப்பட்டுள்ள மிரட்டல் அதிர்ச்சியளிக்கிறது என்பதை நாம் அனைவரும் ஒப்புக்கொள்வோம் என்று நம்புகிறேன்" என்று ஐ.நா. மனித உரிமைகள் அலுவலகப் பேச்சாளர் ரவீனா ஷம்தசானி ஜெனிவாவில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
இஸ்ரேலை நோக்கிப் பட்டங்கள், ட்ரோன்கள் மற்றும் பலூன்கள் ஏவப்படும் சம்பவங்கள் அண்மையில் அதிகரித்ததைத் தொடர்ந்து, இது தொடர்ந்தால் காசாவில் தமது நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்துவதாக ஹமாஸ் அமைப்பிற்கு இஸ்ரேல் ஞாயிற்றுக்கிழமை எச்சரிக்கை விடுத்திருந்தது. எனினும், இந்தச் சம்பவங்களுடன் தமக்குத் தொடர்பில்லை என்று ஹமாஸ் மறுத்துள்ளது.
காசா எல்லைக்கு அருகிலுள்ள பகுதிகளில் சனிக்கிழமையன்று நான்கு பட்டங்களும், ஞாயிற்றுக்கிழமயன்று இராணுவத்தால் சுட்டு வீழ்த்தப்பட்ட ஒன்றும் உட்பட கடந்த நாட்களில் மீட்கப்பட்டவற்றின் மொத்த எண்ணிக்கை சுமார் 10 ஆக உயர்ந்துள்ளதாக இஸ்ரேலிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கடந்த ஆண்டுகளில் காசாவிலிருந்து ஏவப்பட்ட தீமூட்டும் பட்டங்கள் மற்றும் பலூன்கள் தெற்கு இஸ்ரேலில் உள்ள விவசாய நிலங்களில் தீ விபத்துகளை ஏற்படுத்திய பழைய நினைவுகளை இச்சம்பவங்கள் மீட்டுத் தந்துள்ளன. வெடிமருந்துகள் எவையும் பொருத்தப்படாத இந்தப் பட்டங்களை ஹமாஸ்தான் ஏவியிருக்க வேண்டும் என்றும், இஸ்ரேலின் எதிர்வினை எப்படியிருக்கும் என்பதை அவர்கள் பரிசோதித்துப் பார்த்திருக்கலாம் என்றும் இஸ்ரேலிய இராணுவம் நம்புவதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன.
"இஸ்ரேலை நோக்கிய ஏவுதல்கள் உடனடியாக நிறுத்தப்படாவிட்டால், அதற்குப் பொறுப்பானவர்கள் மீது இலக்கு வைக்கப்பட்ட நடவடிக்கைகளை ஐ.டி.எஃப் (IDF) தீவிரப்படுத்தும்... மேலும் பட்டங்கள், ட்ரோன்கள் மற்றும் பலூன்கள் ஏவப்படும் பகுதிகளிலிருந்து பொதுமக்களை வெளியேற்றும்" என்று பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மற்றும் பாதுகாப்பு அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ் ஆகியோர் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட கூட்டு அறிக்கையில் எச்சரித்திருந்தனர்.
இதற்குப் பதிலளித்த ஹமாஸின் அரசியல் துறை உறுப்பினர் பாசெம் நைம், "இடிபாடுகளுக்கு இடையில் தங்கள் அப்பாவிக் குழந்தைப் பருவத்தைத் தேடும் குழந்தைகளினாலேயே காசாவிலிருந்து இந்தப் பட்டங்கள் பறக்கவிடப்படுகின்றன" என்று அறிக்கையொன்றில் தெரிவித்தார்.
மற்றொரு அறிக்கையில், ஞாயிற்றுக்கிழமையன்று காசா மத்திய பகுதியில் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதல்களுக்கு இந்தப் பட்டங்களை ஒரு 'சாக்குப்போக்காக' இஸ்ரேல் பயன்படுத்துவதாக இஸ்லாமியக் குழு குற்றம் சாட்டியுள்ளது. காசாவின் அவசரகால மீட்புப் பணிச் சேவைகளின்படி, இந்தத் தாக்குதல்களில் மூவர் கொல்லப்பட்டுள்ளனர்.
ஞாயிற்றுக்கிழமை வெளியிடப்பட்ட இந்த அறிக்கை, அண்மைக் காலத்தில் விடுக்கப்பட்ட தொடர்ச்சியான மிரட்டல்களின் ஒரு பகுதி மட்டுமே என்பதை ஐ.நா. பேச்சாளர் சுட்டிக்காட்டினார்.
"சர்வதேச மனித உரிமைகள் மற்றும் மனிதாபிமானச் சட்டத்தின் மீதான முழுமையான அவமதிப்பைக் காட்டும் வகையிலும், கொடூரமான குற்றங்களுக்குச் சமமான வுன்முறைகளைத் தூண்டும் வகையிலும் இஸ்ரேலிய அதிகாரிகளின் உயர்மட்டத்திலிருந்து ஏற்றுக்கொள்ள முடியாத பேச்சுக்கள் தொடர்ந்து வெளிவருவதை நாங்கள் காண்கிறோம்" என்று அவர் மேலும் கூறினார்.












