பயணிகள் பேருந்துகளில் டீசலுக்குப் பதிலாக மண்ணெண்ணெய் பயன்படுத்தப்படுவதைக் கண்டறிய பல்வேறு பகுதிகளில் பொலிஸ் திடீர் சோதனைகளை நடத்தி வருகிறது. டீசலுக்குப் பதிலாக சட்டவிரோதமாக மண்ணெண்ணெய் பயன்படுத்தி இயக்கப்படும் பேருந்துகள் குறித்து பொதுமக்கள் அளித்த முறைப்பாடுகளை அடுத்து நாட்டின்…
பயணிகள் பேருந்துகளில் டீசலுக்குப் பதிலாக மண்ணெண்ணெய் பயன்படுத்தப்படுவதைக் கண்டறிய பல்வேறு பகுதிகளில் பொலிஸ் திடீர் சோதனைகளை நடத்தி வருகிறது.
டீசலுக்குப் பதிலாக சட்டவிரோதமாக மண்ணெண்ணெய் பயன்படுத்தி இயக்கப்படும் பேருந்துகள் குறித்து பொதுமக்கள் அளித்த முறைப்பாடுகளை அடுத்து நாட்டின் பல இடங்களில் பொலிஸார் இவ்விசேட சோதனைகளை நடத்தி வருகின்றனர்.
இந்த நடவடிக்கையின்போது மண்ணெண்ணெயில் இயக்கப்பட்ட சுமார் 100 பயணிகள் பேருந்துகள் அடையாளம் காணப்பட்டு சட்ட நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்டுள்ளன.
மேலும் சந்தேகத்திற்குரிய பல பேருந்துகளிலிருந்து எரிபொருள் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் (CPC) ஆய்வகப் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளனடீசல் லீட்டர் ஒன்றின் விலையை விட மண்ணெண்ணெயின் விலை குறைவாக இருப்பதால் கூடுதல் லாபத்துக்காக பல பேருந்து உரிமையாளர்கள், சாரதிகள் டீசலுடன் மண்ணெண்ணெயைக் கலந்து பயன்படுத்துகின்றனர்.
இந்த சட்டவிரோதச் செயலால் பேருந்துகளின் எஞ்சின்கள் கடுமையாகப் பாதிக்கப்படுவதோடு தீவிர காற்று மாசுபாடும் ஏற்படுகிறது. இலாப நோக்கம் இருந்தாலும் சுற்றுச்சூழல் மாசடைவதுடன் வாகனத்தின் இயந்திரப் பாதிப்பும் தொடர்ச்சியாக ஏற்பட்டு வருகிறது.
கேன்கள் அல்லது கொள்கலன்களில் சாதாரண அளவுக்கு அதிகமாக மண்ணெண்ணெய் வாங்குபவர்கள் குறித்து எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் எனவும் பேருந்துகளுக்கு மண்ணெண்ணெய் விநியோகிக்கவோ அல்லது பயன்படுத்தவோ துணை போகக்கூடாது என பொலிஸ் போக்குவரத்து பிரிவு அறிவுறுத்தியுள்ளது.
அண்மையில் கூட கல்முனை தலைமையக பொலிஸாரால் நடத்தப்பட்ட திடீர் சோதனையில் மண்ணெண்ணெயில் இயக்கப்பட்ட 3 பயணிகள் பேருந்துகள் கைப்பற்றப்பட்டு சட்ட நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.இது தவிர கொரோனா காலப்பகுதி மற்றும் தற்போதைய எரிபொருள் நெருக்கடி காலப்பகுதிகளில் கல்முனை பிராந்தியத்தில் பொதுப்போக்குவரத்தில் ஈடுபடும் தனியார் பேருந்து முதல் தனியார் கனரக வாகனங்கள் மண்ணெண்ணெய் எரிபொருளை சட்டவிரோதமாக பயன்படுத்தி வருகின்றமை அவதானிக்க முடிவதாக குறிப்பிடப்படுகிறது.
இது தவிர பொது போக்குவரத்தில் ஈடுபட்டுள்ள தனியார் பேருந்து வாகனங்கள் திடீர் சோதனைகளின்போது சட்டவிரோதமாக 100 லீற்றருக்கும் அதிகமான மண்ணெண்ணெய் கேன்களுடன் கைது செய்யப்பட்ட சம்பவங்களும் பதிவாகியுள்ளன.












