இலஞ்ச அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டிருந்த இலங்கை மீன்பிடி கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் மஹீல் சேனாரத்ன பிணையில் விடுவிக்கப்பட்ட போதிலும், பிணை நிபந்தனைகளைச் சரிவரப் பூர்த்தி செய்யத் தவறியமையால் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளா…
இலஞ்ச அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டிருந்த இலங்கை மீன்பிடி கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் மஹீல் சேனாரத்ன பிணையில் விடுவிக்கப்பட்ட போதிலும், பிணை நிபந்தனைகளைச் சரிவரப் பூர்த்தி செய்யத் தவறியமையால் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.சந்தேகநபர் இன்று (18) கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னரே அவருக்குப் பிணை வழங்கி உத்தரவிடப்பட்டது.
இதன்போது, சந்தேகநபரை தலா 25 இலட்சம் ரூபாய் பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளில் விடுவிக்குமாறும், அவரது வெளிநாட்டுப் பயணங்களைத் தடை செய்யுமாறும் நீதிமன்றம் உத்தரவிட்டது.
இருப்பினும், பிணை நிபந்தனைகளை உரிய முறையில் பூர்த்தி செய்ய முடியாததன் காரணமாகவே அவர் இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
இலங்கை மீன்பிடி கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவரான மஹீல் சேனாரத்ன, முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவின் சகோதரர் ஆவார்.
'ஊழல்' எனும் குற்றத்தைச் புரிந்த குற்றச்சாட்டின் கீழ் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் இன்று (18) காலை இவர் கைது செய்யப்பட்டிருந்தார்.
2010 - 2012 காலப்பகுதியில் நாடு முழுவதிலும் உள்ள மீன் விற்பனை நிலையங்களை நிர்மாணிப்பது மற்றும் புனரமைப்பதில் உரிய கொள்முதல் நடைமுறையைப் பின்பற்றாமல், நேரடியாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட 2 நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கியமை மற்றும் அந்நிறுவனங்களுக்குக் கொடுப்பனவுகளை வழங்குவதற்காக அதிகாரிகளுக்கு அழுத்தம் கொடுத்தமை ஆகியவற்றின் மூலம் 'ஊழல்' புரிந்தார் என்பதே இவர் மீதான குற்றச்சாட்டாகும்.












