Colombo (News 1st) கிராமிய வீதி அபிவிருத்தியின் போது மாவட்ட குழு கூட்டங்களில் சமர்ப்பிக்கப்படும் அவசர மக்கள் தேவைகளுக்கு முன்னுரிமை அளித்து அதற்கான பணிகளை நடைமுறைப்படுத்துமாறு ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க, நெடுஞ்சாலைகள் அமைச்சின் அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்தார்.நெடுஞ்சாலைக…

Colombo (News 1st) கிராமிய வீதி அபிவிருத்தியின் போது மாவட்ட குழு கூட்டங்களில் சமர்ப்பிக்கப்படும் அவசர மக்கள் தேவைகளுக்கு முன்னுரிமை அளித்து அதற்கான பணிகளை நடைமுறைப்படுத்துமாறு ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க, நெடுஞ்சாலைகள் அமைச்சின் அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்தார்.நெடுஞ்சாலைகள் அமைச்சு தொடர்பான 2027 வரவு செலவுத் திட்டத்திற்கு முந்தைய கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி இதனை கூறினார்.பொருளாதார நெருக்கடி நிலைமை காரணமாக 2022ஆம் ஆண்டில் இடைநிறுத்தப்பட்ட அனைத்து வீதி அபிவிருத்தி திட்டங்களையும் மீள ஆரம்பிக்குமாறும் ஜனாதிபதி இதன்போது அதிகாரிகளுக்கு தெரிவித்தார்.அனைத்து வீதி அபிவிருத்தி பணிகளையும் உரிய காலத்தில் நிறைவு செய்து பொதுமக்களுக்கு செயற்றிறனான போக்குவரத்து கட்டமைப்பை வழங்க வேண்டியதன் அவசியத்தை ஜனாதிபதி இதன்போது மேலும் வலியுறுத்தினார்.மத்திய அதிவேக வீதியின் 4ஆம் கட்டத்தின் கீழ் முன்மொழியப்பட்டுள்ள குருணாகல் - கலேவெல மற்றும் ருவன்புர அதிவேக வீதியின் திட்டமிடல்கள் குறித்தும் இங்கு கவனம் செலுத்தப்பட்டுள்ளது.மத்திய அதிவேக வீதியின் கடவத்த - மீரிகம வரையிலான பகுதி மற்றும் துறைமுக நுழைவு வீதியின் நிர்மாணப் பணிகள், மத்திய அதிவேக வீதியின் 3ஆம் கட்டத்தின் கீழ் நடைமுறைப்படுத்தப்படும் பொத்துஹெர - கலகெதர வரையிலான பகுதி உள்ளிட்ட அதிவேக வீதி நிர்மாணத் திட்டங்களின் தற்போதைய நிலை மற்றும் முன்னேற்றம் குறித்தும் இங்கு விரிவாக மீளாய்வு செய்யப்பட்டதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.நாடு முழுவதும் நெடுஞ்சாலைகளைப் பராமரிக்கும் வேலைத்திட்டம் குறித்தும் கலந்துரையாடப்பட்டதுடன், வீதிகள் 10 ஆண்டுகளுக்கு ஒரு தடவை புனரமைக்க வேண்டும் என்ற போதிலும், பல வீதிகள் 15 ஆண்டுகளுக்கு மேலாக புனரமைக்கப்படாத காரணத்தினால் அவற்றை புனர்நிர்மாணம் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக அமைச்சின் அதிகாரிகள் இங்கு சுட்டிக்காட்டினர்.அவ்வாறு கடந்த 15 ஆண்டுகளில் எந்தவிதமான புனரமைப்பு பணிகளும் மேற்கொள்ளப்படாத A மற்றும் B தரத்திலான 130 வீதிகள் உள்ளதாக இதன்போது வௌிப்படுத்தப்பட்டுள்ளது.