சைகை மொழி தொடர்பான சட்டமூலம் விரைவில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என கிராமிய அபிவிருத்தி, சமூக பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சர் உபாலி பன்னிலகே தெரிவித்துள்ளார். சுவிட்சர்லாந்தின் ஜெனீவாவில் நடைபெறவுள்ள விசேட தேவையுடையவர்களின் உரிமைகள் தொடர்பான ஐக்கிய நாடுகள் ச…

சைகை மொழி தொடர்பான சட்டமூலம் விரைவில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என கிராமிய அபிவிருத்தி, சமூக பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சர் உபாலி பன்னிலகே தெரிவித்துள்ளார்.

சுவிட்சர்லாந்தின் ஜெனீவாவில் நடைபெறவுள்ள விசேட தேவையுடையவர்களின் உரிமைகள் தொடர்பான ஐக்கிய நாடுகள் சபையின் 35ஆவது குழு அமர்வில் பங்கேற்பதற்காக புறப்படுவதற்கு முன்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அமைச்சர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

இன்றும் (14) நாளையும் (15) ஜெனீவாவில் உள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் தலைமையகத்தில் நடைபெறும் இந்த அமர்வில், விசேட தேவையுடையவர்களின் உரிமைகள் தொடர்பாக இலங்கை சமர்ப்பித்துள்ள முதலாவது அறிக்கை மீளாய்வு செய்யப்படவுள்ளது.

புதிய அரசாங்கத்தின் கீழ் கடந்த 18 மாதங்களில் விசேட தேவையுடையவர்களின் உரிமைகள் மற்றும் நலன்களை மேம்படுத்துவதற்காக பல்வேறு கொள்கைத் தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளதுடன், பல முக்கிய வேலைத்திட்டங்களும் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இலங்கை வரலாற்றில் முதன்முறையாக விசேட தேவையுடைய ஒருவர் தேசியப் பட்டியல் ஊடாக பாராளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளதாகவும், அவர் விசேட தேவையுடையவர்கள் தொடர்பான பாராளுமன்ற ஒன்றியத்தின் தலைவராக செயற்பட்டு, சட்டவாக்க நடவடிக்கைகளில் பங்களிப்பு செய்து வருவதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

மேலும், விசேட தேவையுடையவர்களின் உரிமைகள் தொடர்பான சட்டத்தை திருத்துவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதுடன், குறித்த சட்டமூலம் தற்போது சட்டமா அதிபர் திணைக்களத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இதனிடையே, விசேட தேவையுடையவர்களின் தேவைகளை நிறைவேற்றும் வகையில் கல்வி, போக்குவரத்து, வீடமைப்பு, நீர்வழங்கல் உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சேர்ந்த அமைச்சுக்கள் ஒருங்கிணைந்து செயற்பட்டு வருவதாகவும் அமைச்சர் உபாலி பன்னிலகே தெரிவித்துள்ளார்.