அரச நிறுவனங்கள் மற்றும் அத்தியாவசிய தகவல் உட்கட்டமைப்புகளின் சைபர் பாதுகாப்பை மேலும் வலுப்படுத்தும் நோக்கில், தேசிய மட்டத்திலான சைபர் அச்சுறுத்தல் கண்டறிதல் மற்றும் தீங்கிழைக்கும் மென்பொருள் (Malware) பகுப்பாய்வு ஆய்வு மையமான MATH Lab-ஐ இலங்கை CERT நிறுவனம் உத்தியோகபூர்வமாக நிறு…
அரச நிறுவனங்கள் மற்றும் அத்தியாவசிய தகவல் உட்கட்டமைப்புகளின் சைபர் பாதுகாப்பை மேலும் வலுப்படுத்தும் நோக்கில், தேசிய மட்டத்திலான சைபர் அச்சுறுத்தல் கண்டறிதல் மற்றும் தீங்கிழைக்கும் மென்பொருள் (Malware) பகுப்பாய்வு ஆய்வு மையமான MATH Lab-ஐ இலங்கை CERT நிறுவனம் உத்தியோகபூர்வமாக நிறுவியுள்ளது.இந்த ஆய்வு மையத்தின் நிறுவல், இலங்கையின் சைபர் பாதுகாப்பு துறையில் முக்கிய மைல்கல்லாகக் கருதப்படுவதுடன், சைபர் தாக்குதல்கள் நிகழ்ந்த பின்னர் பதிலளிக்கும் பாரம்பரிய நடைமுறையிலிருந்து விலகி, உளவுத்தகவல் அடிப்படையிலான முன்கூட்டிய அச்சுறுத்தல் கண்டறிதல் மற்றும் தடுப்பு நடவடிக்கைகளில் கவனம் செலுத்தும் புதிய அணுகுமுறையை அறிமுகப்படுத்துகிறது.
நாட்டில் டிஜிட்டல் அரச சேவைகளும் இணையவழி அரச தளங்களும் விரிவடைந்து வரும் நிலையில், 'பிஷிங்' தாக்குதல்கள், தரவுக் கசிவுகள் மற்றும் இணையத்துடன் இணைக்கப்பட்டுள்ள மின்னணு அமைப்புகளின் பலவீனங்களை இலக்காகக் கொண்ட சைபர் தாக்குதல்கள் அதிகரித்து வருவதாக இலங்கை CERT தெரிவித்துள்ளது.
தேசிய சைபர் பாதுகாப்பு செயற்பாட்டு மையம் (NCSOC) தற்போது மையப்படுத்தப்பட்ட கண்காணிப்பு மற்றும் சம்பவங்களுக்கு பதிலளிக்கும் பணிகளை மேற்கொண்டு வந்தாலும், முன்கூட்டியே அச்சுறுத்தல்களை கண்டறிந்து மேம்பட்ட பகுப்பாய்வுகளை மேற்கொள்ளும் தனித்திறன் கொண்ட அமைப்பின் தேவை காரணமாகவே MATH Lab நிறுவப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆய்வு மையம், சர்வதேச தரநிலைகளுக்கு அமைவாக Proactive Threat Hunting உள்ளிட்ட மேம்பட்ட சேவைகளை வழங்கி, வலையமைப்புகளுக்குள் மறைந்திருக்கும் அச்சுறுத்தல்களை சேதம் ஏற்படுவதற்கு முன்பே கண்டறியும் திறனை வழங்கும்.
மேலும், அரச நிறுவனங்களின் இணையத்துடன் இணைக்கப்பட்டுள்ள மின்னணு சொத்துக்களை External Attack Surface Monitoring (EASM) தொழில்நுட்பத்தின் மூலம் தொடர்ச்சியாகக் கண்காணித்து, பாதுகாப்பு குறைபாடுகள், தவறான கட்டமைப்புகள் மற்றும் தாக்குதல்களுக்கு வழிவகுக்கும் நுழைவு வாயில்களை அடையாளம் காண்பதும் இந்த ஆய்வு மையத்தின் முக்கிய பணிகளில் ஒன்றாகும்.
அதேவேளை, தேசிய சைபர் அச்சுறுத்தல் உளவுத்தகவல் (Cyber Threat Intelligence – CTI) பகிர்வு அமைப்பின் ஊடாக, அரச நிறுவனங்களுக்கு நடைமுறையில் பயன்படுத்தக்கூடிய அச்சுறுத்தல் தகவல்களை சேகரித்து, பகுப்பாய்வு செய்து, உரிய நேரத்தில் பகிர்வதன் மூலம் நாட்டின் ஒட்டுமொத்த சைபர் பாதுகாப்பு மேலும் வலுப்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரச அமைப்புகளை தொடர்ச்சியாகக் கண்காணித்து, உளவுத்தகவல் அடிப்படையிலான ஆய்வுகள் மூலம் அச்சுறுத்தல்களை ஆரம்ப நிலையிலேயே கண்டறிதல், தாக்குதலாளர்கள் அமைப்புகளுக்குள் நீண்டகாலம் நிலைத்திருப்பதைத் தடுப்பது மற்றும் பெரியளவிலான சைபர் தாக்குதல்கள் உருவாகுமுன் அவற்றை முறியடித்தல் ஆகியவை இந்த ஆய்வு மையத்தின் பிரதான நோக்கங்களாகும்.MATH Lab, 250-க்கும் மேற்பட்ட அரச நிறுவனங்களுக்கு சேவைகளை வழங்குவதுடன், சுகாதாரம், கல்வி, எரிசக்தி உள்ளிட்ட அத்தியாவசிய துறைகளில் ஒருங்கிணைந்த, உளவுத்தகவல் சார்ந்த தேசிய சைபர் பாதுகாப்பு அணுகுமுறையை உருவாக்குவதற்கும் பங்களிக்கவுள்ளது.
மேலும், மால்வேர் பகுப்பாய்வு மற்றும் சைபர் அச்சுறுத்தல் கண்டறிதல் துறைகளில் உள்நாட்டு நிபுணத்துவத்தை மேம்படுத்துவதன் மூலம், சிக்கலான சைபர் தாக்குதல்களை எதிர்கொள்வதில் வெளிநாட்டு தொழில்நுட்ப உதவியைச் சார்ந்திருக்கும் நிலையை குறைத்து, இலங்கையின் சுயாதீன சைபர் திறன்களை வலுப்படுத்தும் என்றும் இலங்கை CERT தெரிவித்துள்ளது.
நாட்டின் டிஜிட்டல் உட்கட்டமைப்புகளைப் பாதுகாப்பதற்கும், அரசின் டிஜிட்டல் சேவைகள் மீதான மக்களின் நம்பிக்கையை மேலும் வலுப்படுத்துவதற்குமான நீண்டகால முதலீடாக இந்த ஆய்வு மையம் அமையும் எனவும், இலங்கையின் டிஜிட்டல் எதிர்காலத்தைப் பாதுகாக்க அரசின் அனைத்து நிறுவனங்களுடனும் தொடர்ந்தும் நெருக்கமாக இணைந்து செயல்பட உறுதிபூண்டுள்ளதாகவும் இலங்கை CERT குறிப்பிட்டுள்ளது.












