தமிழக முதல்வர் சி. ஜோசப் விஜய் மற்றும் நடிகை த்ரிஷா குறித்து சர்ச்சையை ஏற்படுத்தியதாகக் கூறப்படும் பேச்சு தொடர்பில், தமிழக சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் இன்று (04) காலை கைது செய்யப்பட்டுள்ளார். தஞ்சாவூரில் நேற்று (03) காவிரி மற்றும் மேகேதாட்டு விவகாரம் தொடர்…

தமிழக முதல்வர் சி. ஜோசப் விஜய் மற்றும் நடிகை த்ரிஷா குறித்து சர்ச்சையை ஏற்படுத்தியதாகக் கூறப்படும் பேச்சு தொடர்பில், தமிழக சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் இன்று (04) காலை கைது செய்யப்பட்டுள்ளார்.

தஞ்சாவூரில் நேற்று (03) காவிரி மற்றும் மேகேதாட்டு விவகாரம் தொடர்பாக திமுக நடத்திய கண்டன ஆர்ப்பாட்டத்தில் உரையாற்றிய உதயநிதி ஸ்டாலின், தமிழக அரசையும் முதல்வர் விஜயையும் கடுமையாக விமர்சித்திருந்தார். அந்த உரையின் ஒரு பகுதி முதல்வர் விஜய் மற்றும் நடிகை த்ரிஷாவை அவமதிக்கும் வகையில் இருந்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்டதைத் தொடர்ந்து, தவெக அமைச்சர்கள் மற்றும் பல்வேறு அரசியல் தரப்பினர் கண்டனம் வெளியிட்டனர்.

இதையடுத்து, பதிவு செய்யப்பட்ட வழக்கின் அடிப்படையில், நீலாங்கரையில் உள்ள அவரது இல்லத்திற்கு சென்ற பொலிஸார், திமுக நிர்வாகிகள் மற்றும் குடும்பத்தினருடன் பேச்சுவார்த்தை நடத்திய பின்னர் உதயநிதி ஸ்டாலினை கைது செய்தனர்.

கைதுக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் கருத்து தெரிவித்த உதயநிதி ஸ்டாலின், காவிரி மற்றும் மேகேதாட்டு விவகாரத்தில் அரசின் செயல்பாடுகளை மட்டுமே விமர்சித்ததாகவும், தாம் பேசாத விடயத்தை பேசியதாகக் கூறி பொய்யான பிரசாரம் மேற்கொள்ளப்பட்டு, அரசியல் நோக்கத்துடன் வழக்குப் பதிவு செய்து கைது செய்யப்பட்டுள்ளதாகவும் குற்றஞ்சாட்டினார். மேலும், சட்டரீதியாக இந்த வழக்கை எதிர்கொள்வேன் என்றும் தெரிவித்தார்.