1990ஆம் ஆண்டு மட்டக்களப்பு சத்துருக்கொண்டான் பகுதியில் இடம்பெற்றதாகக் கூறப்படும் படுகொலை மற்றும் காணாமல் ஆக்கப்பட்ட சம்பவங்கள் தொடர்பான விசாரணையின் முன்னேற்றம் குறித்து நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. 2026 ஆகஸ்ட் 7ஆம் திகதி நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பிய தமிழரசுக்…
1990ஆம் ஆண்டு மட்டக்களப்பு சத்துருக்கொண்டான் பகுதியில் இடம்பெற்றதாகக் கூறப்படும் படுகொலை மற்றும் காணாமல் ஆக்கப்பட்ட சம்பவங்கள் தொடர்பான விசாரணையின் முன்னேற்றம் குறித்து நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.
2026 ஆகஸ்ட் 7ஆம் திகதி நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பிய தமிழரசுக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் , 2026/03/20 என்ற இலக்கத்தின் கீழ் CIDயின் கொலை விசாரணைப் பிரிவினால் விசாரணை முன்னெடுக்கப்படுவதாகத் தெரிவித்தார்.
இந்நிலையில், சம்பவம் தொடர்பில் முறைப்பாடு செய்துள்ள நபர் ஒருவர் எதிர்வரும் ஆகஸ்ட் 14ஆம் திகதி காலை 9 மணிக்கு CID தலைமையகத்தின் 4ஆம் மாடிக்கு விசாரணைக்காக அழைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இதுவரை எத்தனை சாட்சிகள் விசாரிக்கப்பட்டுள்ளனர், சந்தேகநபர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனரா, கைது அல்லது வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளதா, விசாரணை அறிக்கை சட்டமா அதிபரிடம் அனுப்பப்பட்டுள்ளதா என்பன உள்ளிட்ட கேள்விகளை அவர் அரசாங்கத்திடம் முன்வைத்துள்ளார்.
1990 செப்டெம்பர் மாதம் சத்துருக்கொண்டான் உள்ளிட்ட பகுதிகளில் பெருமளவான தமிழ் பொதுமக்கள் கொல்லப்பட்டதாகவும், 1997ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளிலும் சம்பவம் தொடர்பான தகவல்கள் பதிவாகியிருந்ததாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
“பாதிக்கப்பட்டவர்களையே மீண்டும் மீண்டும் விசாரிப்பதற்குப் பதிலாக, முன்னைய விசாரணைகளில் குறிப்பிடப்பட்டவர்கள் மீது ஏன் இதுவரை சட்ட நடவடிக்கை எடுக்கப்படவில்லை?” என அவர் கேள்வி எழுப்பினார்.
மேலும், வடக்கு மற்றும் கிழக்கில் இடம்பெற்றதாகக் கூறப்படும் படுகொலைகள், வலுக்கட்டாயக் காணாமல் ஆக்கங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பான அனைத்து விசாரணைகளின் நிலையும் அரசாங்கம் வெளிப்படுத்த வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தார்.
பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உண்மை, பொறுப்புக்கூறல் மற்றும் நீதி கிடைக்க வேண்டும் என்பதே தமது நிலைப்பாடு எனவும் அவர் வலியுறுத்தினார்.












