ஊடகவியலாளர் பிரகீத் ஏக்னலிகொட கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் ஹோமாகம மேல் நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் வழக்கு விசாரணையின் போது, கிரிதலே 3 ஆவது கவச புலனாய்வுப் படைமுகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்த முன்னாள் புலி உறுப்பினரான சுமதிபால சுரேஷ் குமார் என்ற ‘முரளி’, அந்த முகாமில் இருந்…
ஊடகவியலாளர் பிரகீத் ஏக்னலிகொட கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் ஹோமாகம மேல் நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் வழக்கு விசாரணையின் போது, கிரிதலே 3 ஆவது கவச புலனாய்வுப் படைமுகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்த முன்னாள் புலி உறுப்பினரான சுமதிபால சுரேஷ் குமார் என்ற ‘முரளி’, அந்த முகாமில் இருந்த நான்கு இராணுவ அதிகாரிகளை திறந்த நீதிமன்றத்தில் அடையாளம் காட்டியுள்ளார்.
சாட்சியமளித்த சுமதிபால சுரேஷ் குமார், 2009 ஆம் ஆண்டு முதல் 2013 ஆம் ஆண்டு வரையிலான காலப்பகுதியில் கிரிதலே இராணுவப் புலனாய்வுப் பிரிவு முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்ததாகச் சாட்சியமளித்ததுடன், அவ்வாறு தடுத்து வைக்கப்பட்டிருந்த காலத்தில் 1 ஆம் குற்றவாளி முதல் 4 ஆம் குற்றவாளி வரையிலான நபர்களும் ஏனையோரும் அந்த முகாமில் இருந்ததாகத் தெரிவித்தார்.
ஊடகவியலாளர் பிரகீத் ஏக்னலிகொட 2009 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 27 ஆம் திகதி கடத்தப்பட்டமை தொடர்பாக 7 குற்றஞ்சாட்டப்பட்டவர்களுக்கு எதிராகச் சட்டமா அதிபர் ஹோமாகம மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளார்.
ஏக்னலிகொட 2009 ஆகஸ்ட் 27 அன்று கடத்தப்பட்டு வழியில் இறக்கிவிடப்பட்டதுடன், பின்னர் 2010 ஜனவரி 24 அன்று கடத்தப்பட்டுக் காணாமல் ஆக்கப்பட்டார். 2010 ஜனவரி 24 அன்று ஏக்னலிகொட கடத்தப்பட்டுக் காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பான வழக்கு விசாரணை கொழும்பு மூவரடங்கிய மேல் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகின்றது. தான் கிரிதலே முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்த போது, இராணுவ அதிகாரிகள் தொலைபேசியொன்றை வழங்கி, அவர்கள் தரும் எண்களுக்கு அழைப்புகளை ஏற்படுத்துமாறு பணித்ததாகவும், அவ்வாறு அழைக்கப்பட்டவர்களில் வெளிநாடுகளில் உள்ளவர்களும் அடங்குவர் என்றும், 2010 ஜனவரி 24 அன்று ஏக்னலிகொடவிற்கும் தொலைபேசி அழைப்பு எடுக்கப்பட்டதாகவும் சுமதிபால குறிப்பிட்டார்.












