மேற்கு வங்கத்தின் முர்ஷிதாபாத் மாவட்டத்தில் 16 வயது சிறுவன் ஒருவர் கடந்த சில ஆண்டுகளாகத் தனது பெரும்பாலான நேரத்தைக் குளத்திலேயே கழித்து வரும் விசித்திரச் சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தண்ணீரை விட்டு வெளியே வந்தால் உடலில் கடும் எரிச்சல் ஏற்படுவதாகவும்…
மேற்கு வங்கத்தின் முர்ஷிதாபாத் மாவட்டத்தில் 16 வயது சிறுவன் ஒருவர் கடந்த சில ஆண்டுகளாகத் தனது பெரும்பாலான நேரத்தைக் குளத்திலேயே கழித்து வரும் விசித்திரச் சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தண்ணீரை விட்டு வெளியே வந்தால் உடலில் கடும் எரிச்சல் ஏற்படுவதாகவும், தண்ணீருக்குள் இருக்கும்போது மட்டுமே அந்த எரிச்சல் தணிவதாகவும் அச் சிறுவன் தெரிவித்துள்ளான். மேலும், தனது உடலுக்குள் 'ஜின்' எனப்படும் அமானுஷ்ய சக்தி நுழைந்திருப்பதாகவும் அவன் உறுதியாக நம்புகிறான்.
இதுகுறித்து மருத்துவர்கள் கூறுகையில், இது 'அக்வாகெனிக் புருரிடஸ்' (Aquagenic Pruritus) எனப்படும் அரிய நீரால் தூண்டப்படும் தோல் அரிப்பு பாதிப்பாக இருக்கலாம் எனச் சந்தேகித்தாலும், அவனது அறிகுறிகள் வழக்கமான மருத்துவ நிலைமைகளிலிருந்து மாறுபடுவதால் கூடுதல் மருத்துவப் பரிசோதனைகள் அவசியமெனத் தெரிவித்துள்ளனர்.
நீண்ட நேரம் தொடர்ச்சியாகத் தண்ணீருக்குள் இருப்பதால் அவனது தோல் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதுடன், சளி மற்றும் கடுமையான இருமலும் ஏற்பட்டுள்ளது. எனினும், குடும்பத்தினரிடம் போதிய நிதி வசதியின்மை காரணமாகத் தொடர் மருத்துவ உதவியைப் பெற முடியாமல் தவித்து வருகின்றனர்.
இதையறிந்த அப்பகுதி மக்கள், சிறுவன் வசிக்கும் குளத்திற்கே நேரில் சென்று உணவு உள்ளிட்ட அத்தியாவசிய உதவிகளை வழங்கி வருகின்றனர். தொடர்ச்சியாகத் தண்ணீருக்குள் வாழ்வது அவனது உடல்நிலையை மேலும் மோசமாக்கக்கூடும் என்பதால், உடனடியாக உரிய உயர்தர மருத்துவ உதவி வழங்கப்பட வேண்டும் என அப்பகுதி மக்கள் தீவிரக் கவலை வெளியிட்டுள்ளனர்.












